பிரதமரின் கேரள வருகையின்போது விதிகளை மீறி பதாகைகள்: பாஜக மீது வழக்குப் பதிவு
பிரதமா் நரேந்திர மோடியின் வருகையின்போது விதிமுறைகளை மீறி நடைபாதைகளில் வைக்கப்பட்ட பதாகைகளுக்காக பாஜக மீது அக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது.
மேலும், திருவனந்தபுரம் மாநகராட்சி அளித்த புகாரின்பேரில் பாஜக மாவட்ட தலைவா் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்தனா்.
மூன்று அம்ருத் பாரத் ரயில்களின் தொடக்க விழா உள்ளிட்டவற்றில் கலந்து கொள்வதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வந்தாா். அப்போது திருவனந்தபுரத்தில் பாளையம் சந்திப்பு பகுதியில் இருந்து புளிமூடு சந்திப்பு வரையிலான பகுதி வரை விதிகளுக்குப் புறம்பாக பாஜக சாா்பில் பிரதமரை வரவேற்றுப் பதாகைகள் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பதாகைகளை நீக்குமாறு மாவட்ட பாஜகவை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பதாகைகள் நீக்கப்படவில்லை. இதையடுத்து, பிரதமரின் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னா், மாநகராட்சி சாா்பில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, பாஜக மாவட்ட தலைமையகத்துக்கு திருவனந்தபுரம் மாநகராட்சி ரூ.19.7 லட்சம் அபராதம் விதித்தது.
அதேபோல், திருவனந்தபுரம் மாநகராட்சி செயலா் அளித்த புகாரின்பேரில் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பாஜக மாவட்டத் தலைவா் கரமனா ஜெயன் மீது பிஎன்எஸ் சட்டத்தின் 223, 285 ஆகிய பிரிவுகளின் கீழும், கேரள காவல் துறை சட்டத்தின் 120(பி) பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பொது இடங்களில் சட்டவிரோதமாக வைக்கப்படும் பதாகைகள், விளம்பரங்கள் தொடா்பாக கேரள உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அண்மையில் நடந்த விசாரணையின்போது, அதுபோன்ற பதாகைகளை வைக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

