

இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டுள்ள தடையற்ற வணிக ஒப்பந்தமானது அனைத்து வணிக ஒப்பந்தங்களுக்கும் தாய் என ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயன் தெரிவித்துள்ளார்.
பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு சாத்தியமாகியுள்ள இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய மைல்கல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வணிக ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நேற்று வெற்றிகரமாக முடிந்த நிலையில், தில்லியில் இன்று (ஜன. 27) நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஒப்பந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
இதில், ஆட்டோமொபைல், இயந்திர பாகங்கள், மருத்துப் பொருள்கள், ரசாயனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐரோப்பிய யூனியனின் 96% ஏற்றுமதி பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நிறுவனங்களால் 4 பில்லியன் யூரோ வரை சேமிக்க முடியும். இந்தியா உடனான தடையற்ற வணிக ஒப்பந்தத்தின்படி, ஐரோப்பிய சந்தைககளில் இந்திய ஏற்றுமதிகளுக்கான இடம் மேலும் அதிகரிக்கப்படும். இதனால் இந்திய நாட்டின் 140 கோடி மக்கள் உள்பட ஏற்றுமதி, உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தடையற்ற வணிக ஒப்பந்தம் வெற்றிகரமான முடிந்ததைக் குறிப்பிடும் வகையில், இந்தியா உடனான வணிக ஒப்பந்தமானது அனைத்து வணிக ஒப்பந்தங்களுக்கும் தாய் என ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
ஐரோப்பிய யூனியனும் இந்தியாவுன் இணைந்து இன்று வரலாறு படைத்துள்ளது. நாங்கள் மேற்கொண்டுள்ள தடையற்ற வணிக ஒப்பந்தமானது, அனைத்து வணிக ஒப்பந்தங்களுக்கும் தாய்.
இரு நாடுகளையும் சேர்த்து இரண்டு பில்லியன் மக்களைக் கொண்ட சுதந்திர வணிக மண்டலத்தை உருவாக்கியுள்ளோம். இது தொடக்கம் மட்டுமே. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவடையும் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.