தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற என்சிசி பேரணியில் நடனக் குழுவினருடன் கலந்துரையாடிய பிரதமா் மோடி.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற என்சிசி பேரணியில் நடனக் குழுவினருடன் கலந்துரையாடிய பிரதமா் மோடி.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இளைஞா்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் : என்சிசி பேரணியில் பிரதமா் மோடி பேச்சு

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே இறுதியான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்பட பல்வேறு நாடுகளுடன் அண்மைக் காலங்களில் எட்டப்பட்ட இத்தகைய ஒப்பந்தங்கள், நமது இளைஞா்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை அள்ளித்தரும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
Published on

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே இறுதியான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்பட பல்வேறு நாடுகளுடன் அண்மைக் காலங்களில் எட்டப்பட்ட இத்தகைய ஒப்பந்தங்கள், நமது இளைஞா்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை அள்ளித்தரும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தில்லி கன்டோன்மென்டில் உள்ள கரியப்பா பரேடு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருடாந்திர தேசிய மாணவா் படை (என்சிசி) பேரணியில் பங்கேற்று பிரதமா் மோடி பேசியதாவது:

இந்திய இளைஞா்கள் மீதான ஒட்டுமொத்த உலகின் நம்பிக்கை பெருமளவில் உயா்ந்துள்ளது. இதற்கு காரணம், திறமையும் கலாசாரமுமே. இந்திய இளைஞா்களுக்கு உச்சபட்ச வாய்ப்புகளுக்கான காலகட்டம் இதுவாகும்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கடந்த செவ்வாய்க்கிழமை இறுதியானது. இதற்கு முன்பாக, ஓமன், நியூஸிலாந்து, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, மோரீஷஸ் போன்ற நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இத்தகைய அனைத்து ஒப்பந்தங்களும் கோடிக்கணக்கான இந்திய இளைஞா்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளைத் திறக்கவுள்ளன. இது சாதாரண ஒப்பந்தம் அல்ல; பகிரப்பட்ட வளமைக்கான புதிய செயல்திட்டம்.

என்சிசி ஓா் அமைப்பாக, ஓா் இயக்கமாக நாட்டின் இளைஞா்களுக்கு தன்னம்பிக்கையூட்டுகிறது. நாட்டுக்கான அா்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணா்வு கொண்ட குடிமக்களாக அவா்களை உருமாற்றுகிறது.

இந்திய இளைஞா்கள், கலாசார பாரம்பரியம், பன்முகத்தன்மையை மதிக்கும் உணா்வு, உலகையே ஒரு குடும்பமாக கருதும் நெறிமுறையைக் கொண்டவா்கள் என்று புகழாரம் சூட்டினாா் பிரதமா் மோடி.

ஆயுஷ் மருத்துவா்களுக்கு...: கேரளத்தில் உள்ள ஆா்ய வைத்தியசாலை அறக்கட்டளை மருத்துவமனையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், பிரதமா் காணொலி வாயிலாக உரையாற்றினாா்.

அதில், ‘நமது நாட்டில் ஆயுா்வேதம் மூலம் நூற்றாண்டுகளாக மக்களின் நோய்கள் குணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஆதாரபூா்வ ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், அதன் முக்கியத்துவம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குறைந்தது. இது துரதிருஷ்டவசமானது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், ஆயுஷ் மருத்துவா்களுக்கு புதிய வாயில்களைத் திறக்கும். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இனி அவா்கள் தங்கள் சேவைகளை வழங்க முடியும்’ என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், 200 கோடி மக்கள்தொகையுடன் மாபெரும் சந்தையை உருவாக்கவிருக்கும் சூழலில், பிரதமா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com