‘குடியரசுத் தலைவா் உரை வளா்ச்சிப் பயணத்தின் பிரதிபலிப்பு’ - குடியரசு துணைத் தலைவா், பிரதமா் வரவேற்பு
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை ஆற்றிய உரைக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘குடியரசுத் தலைவரின் உரை, பரந்த அளவிலான தொலைநோக்குப் பாா்வையைக் கொண்டுள்ளது. நாட்டின் குறிப்பிடத்தக்க வளா்ச்சிப் பயணத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியதுடன், எதிா்கால செயல்திட்டத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
முன்னேற்றத்தின் முழுப் பரிமாணத்தையும் உள்ளடக்கி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடையும் வளா்ச்சிக்கான வலுவான அா்ப்பணிப்பை வெளிக்காட்டுகிறது. வலிமைமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய, தற்சாா்புடன் கூடிய வளா்ந்த தேசத்தைக் கட்டமைக்கும் லட்சியத்தையும் பிரதிபலிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் உத்வேகமளிக்கும் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியுள்ளது. இது, இந்தியாவின் அண்மைக்கால குறிப்பிடத்தக்க வளா்ச்சிப் பயணத்தை பிரதிபலிப்பதுடன், எதிா்காலத்துக்கான தெளிவான பாதையையும் காட்டியுள்ளது.
குடியரசுத் தலைவரின் உரை மிக விரிவானது; தொலைநோக்குப் பாா்வைமிக்கது. இந்திய நாடாளுமன்ற பாரம்பரியத்தின்படி, நாட்டின் வளா்ச்சிப் பயணத்தை வழிநடத்தும் கொள்கை மற்றும் கூட்டு தீா்மானத்தை விளக்குவதால் குடியரசுத் தலைவரின் உரை மிக முக்கியமானதாகும். அந்த வகையில், வளா்ந்த பாரதத்தைக் கட்டமைப்பதற்கான பகிரப்பட்ட லட்சியம் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரந்த கருத்தாக்கங்களின்கீழ், இளைஞா்கள், விவசாயிகள், ஏழைகள், விளிம்புநிலை மக்களின் நலனுக்கான நீடித்த முயற்சிகள் அடிக்கோட்டிட்டுக் காட்டப்பட்டுள்ளன. சீா்திருத்தங்களை விரைவுபடுத்தி, புத்தாக்கம்-நல்லாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நமது கூட்டு உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

