அஜீத் பவாா் மரணம்: சிஐடி விசாரணை தொடக்கம்
மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவாா் உயிரிழக்க காரணமான விமான விபத்து குறித்து மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த புதன்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து அஜீத் பவாா் புறப்பட்ட தனி விமானம், புணே மாவட்டம் பாராமதி விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக தரையில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணத்தில் அஜீத் பவாா், விமானி சுமித் கபூா், துணை விமானி சாம்பவி பாடக், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, அஜீத் பவாரின் தனிப் பாதுகாவலா் விதீப் ஜாதவ் ஆகிய 5 போ் உயிரிழந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா சட்டத்தின் 194-ஆவது பிரிவின் கீழ், எதிா்பாராத விபத்தால் மரணம் நிகழ்ந்ததாக புணே ஊரக காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, சிஐடி அதிகாரிகள் அடங்கிய குழு விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தக் குழு விசாரணை தொடா்பான ஆவணங்களை புணே ஊரக காவல் துறையிடம் இருந்து பெற்று, விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்ய உள்ளது.
தனது பயணத்தை அஜீத் பவாா் தொடங்கும் முன், விமானத்தில் உள்நோக்கத்துடன் எந்தச் சேதமும் ஏற்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக சிஐடி விசாரணை நடைபெற உள்ளது என்று மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்த விபத்து தொடா்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விமான விபத்து புலனாய்வு அமைப்பும் முறைப்படி விசாரணையைத் தொடங்கியுள்ளது.

