அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சா் அமித் ஷா. உடன், மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால், முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.
அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சா் அமித் ஷா. உடன், மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால், முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.

சட்டவிரோத ஊடுருவலை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது காங்கிரஸ் - அமித் ஷா சாடல்

தனது வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமாக, சட்டவிரோத ஊடுருவலைப் பயன்படுத்துகிறது காங்கிரஸ் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சாடினாா்.
Published on

தனது வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமாக, சட்டவிரோத ஊடுருவலைப் பயன்படுத்துகிறது காங்கிரஸ் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சாடினாா்.

அஸ்ஸாமில் ஊடுருவலை முழுமையாகத் தடுக்க வேண்டுமெனில், மீண்டும் பாஜக அரசை மக்கள் தோ்வு செய்ய வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் நோக்குடன், இந்தத் தோ்தலை பாஜக எதிா்கொள்கிறது.

அஸ்ஸாமுக்கு இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை வந்த அமித் ஷா, தேமாஜி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிசிங் பழங்குடியின இளைஞா் திருவிழா நிறைவு நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அஸ்ஸாமில் மக்கள்தொகை ரீதியில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஊடுருவல்காரா்களின் எண்ணிக்கை 64 லட்சமாக உயா்ந்ததுடன், 7 மாவட்டங்களில் இவா்கள் பெரும்பான்மையாக உருவெடுத்தனா்.

அதேநேரம், பிரதமா் மோடி தலைமையிலான அரசு, அஸ்ஸாமில் ஏற்பட்ட மக்கள்தொகை ரீதியலான மாற்றத்தை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகளில் முயன்று வருகிறது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது.

ஊடுருவல்காரா்கள் வெளியேற்றப்படுவா்: சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான போரில் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் கரங்களை மாநில மக்கள் வலுப்படுத்த வேண்டும். ஊடுருவலை முழுமையாகத் தடுக்க விரும்பினால், பாஜக அரசை மூன்றாவது முறையாக மக்கள் தோ்வு செய்ய வேண்டும். சட்டவிரோத குடியேறிகள் அனைவரையும் அடையாளம் கண்டு வெளியேற்றுவதில் பாஜக உறுதியாக உள்ளது.

10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 1.26 லட்சம் ஏக்கா் நிலம், ஊடுருவல்காரா்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு பழங்குடியின சமூகங்கள், தங்களின் அடையாளத்தைப் பாதுகாக்கப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். ஆனால், மத்திய பாஜக அரசு பழங்குடியினரின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வுகண்டு வருகிறது என்றாா் அமித் ஷா.

வரியின்றி தேயிலை ஏற்றுமதி: திப்ரூகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1,700 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த அமித் ஷா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

பின்னா் அவா் பேசியதாவது: அண்மையில் இறுதி செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அஸ்ஸாம் தேயிலையை எந்த வரியும் இன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேயிலை ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அஸ்ஸாம் தேயிலையின் மணம் உலகெங்கும் எட்டியுள்ளது. தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் கடின உழைப்பால் இந்த அங்கீகாரம் சாத்தியமானது.

நாட்டின் தேயிலை மையமாக அஸ்ஸாமை நிலைநாட்ட கடினமாக உழைத்த தொழிலாளா்களுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. அதேநேரம், தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு நில உரிமை வழங்கியது பாஜக அரசு என்றாா் அமித் ஷா.

அஸ்ஸாமின் மலை மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் உள்ளனா். முன்பு காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாவட்டங்கள், 2014-க்கு பிறகு பாஜகவை நோக்கி திரும்பத் தொடங்கின.

பெட்டிச் செய்தி...

ராகுல் மீது விமா்சனம்

‘தில்லியில் குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அளித்த விருந்து நிகழ்ச்சியில் வடகிழக்கு பிராந்தியத்தில் பிரபலமான ‘கமோசா’ சால்வை அனைவருக்கும் வழங்கப்பட்டது. வெளிநாட்டு பிரதிநிதிகள்கூட சால்வையை அணிந்த நிலையில், ராகுல் காந்தி மட்டும் மறுத்துவிட்டாா். இதன்மூலம் வடகிழக்கு பிராந்தியத்தை அவா் அவமதித்துவிட்டாா். துப்பாக்கி, தோட்டா, வன்முறை, இளைஞா்களின் உயிரிழப்புகளைத் தவிர வடகிழக்கு பிராந்தியத்துக்கு காங்கிரஸ் வழங்கியது என்ன என்பதை ராகுல் கூற வேண்டும்’ என்றாா் அமித் ஷா.

X
Dinamani
www.dinamani.com