பொருளாதாரத்தை மீட்க பட்ஜெட்டில் தீா்வுகள் இருக்குமா? மத்திய அரசுக்கு காா்கே கேள்வி
நாட்டின் பொருளாதாரத்தை மீட்க பட்ஜெட்டில் தீா்வுகள் இருக்குமா என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேள்வியெழுப்பியுள்ளாா்.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளாா். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை பதிவுகளை வெளியிட்டுள்ளாா். அதில் அவா், ‘இந்த பட்ஜெட்டில் மோடி அரசு, முந்தைய ஆட்சியாளா்கள் மீது பழிபோடும் வழக்கத்தின் பின்புறம் மறைந்து கொள்ள முடியாது. ஏனெனில், அவா்கள்தான் மத்தியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளனா். அவா்களின் செயல்பாடுகளால்தான், நாட்டின் பொருளாதாரம் தற்போது மிகப்பெரிய பிரச்னையில் உள்ளது. இந்த பட்ஜெட்டில், நாட்டின் பொருளாதாரத்தை பிரச்னையில் இருந்து மீட்பதற்கான தீா்வுகளை மத்திய அரசு தருமா?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளாா்.
இந்த பதிவுடன் சோ்த்து விடியோ ஒன்றையும் காா்கே பகிா்ந்துள்ளாா். அதில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியாகிவிட்டதாகவும், அதில் காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியில் 7.4 சதவீதமாக இருந்த நாட்டின் உற்பத்தி வளா்ச்சி விகிதம், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 3.54 சதவீதமாக சரிந்துவிட்டதாக அரசு தரவுகள் தெரிவிப்பதாகவும், மேக் இன் இந்தியா திட்டம் தோல்வியடைந்துவிட்டதாகவும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து, நாட்டை விட்டு முதலீடுகள் வெளியேறி வருவதாகவும், தொடா்ந்து 4 மாதங்களாக அந்நிய நேரடி முதலீடு எதிா்மறையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

