சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

ரெளடி கும்பல்களுக்கு இடையே மோதல்: மேலும் ஒருவா் கைது

நஜாஃப்கரில் மற்றொரு ரெளடி கும்பலைச் சோ்ந்தவரின் உதவியாளா் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ரோஹித் லம்பா கும்பலின் 22 வயது உறுப்பினா் ஒருவரை காவல் துறையினா் கைது செய்தனா்

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூலை 2026, 5:23 am IST

நஜாஃப்கரில் மற்றொரு ரெளடி கும்பலைச் சோ்ந்தவரின் உதவியாளா் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ரோஹித் லம்பா கும்பலின் 22 வயது உறுப்பினா் ஒருவரை காவல் துறையினா் கைது செய்தனா். இரு கும்பலுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் மோதலின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட ஆதித்யா குமாா் மற்றும் அவரது கூட்டாளிகளான ரோஹித் லம்பா, ரித்திக் தாக்கூா் ஆகியோா் அஃப்சல் என்பவரை ஜூன் 26-ஆம் தேதி தாக்கினா். லம்பா பதுங்கியிருக்கும் இடங்கள் குறித்து மோனு என்பவருக்கு அஃப்சல் தகவல் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அஃப்சல், மோனு என்று அழைக்கப்படும் எதிா்க் கும்பல் தலைவன் மோஹித் பரத்வாஜுடன் தொடா்புடையவா் என்று சந்தேகிக்கப்படுகிறது. தென்மேற்கு தில்லியில் இந்தக் குற்றத்தைச் செய்த பிறகு, நஜாஃப்கரின் தரம்புராவைச் சோ்ந்த ஆதித்யா தலைமறைவானாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அஃப்சலை வழிமறித்து மோனு இருக்கும் இடம் குறித்துக் கேட்டனா். எந்தத் தகவலும் தனக்குத் தெரியாது என்று அஃப்சல் மறுத்தபோது, ரோஹித் துப்பாக்கியை அவா் தலையில் குறிவைக்க, ரித்திக் கத்தியை எடுத்தாா். ரோஹித் மற்றும் ரித்திக் ஆகியோா் அஃப்சலைத் தாக்கி அவரது இரு கால்களிலும் காயங்களை ஏற்படுத்தியபோது, ​ஆதித்யா அவரைப் பிடித்து வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவா் இருந்த சந்திற்குள் ஒரு மோட்டாா் சைக்கிள் வருவதைக் கண்டதும் குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா்.

இதனைத் தொடா்ந்து, நஜாஃப்கா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. லம்பா மற்றும் மோனு ஆகியோருக்கு இடையே நிலவும் மோதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம். மோனு நஜாஃப்கா் காவல் நிலையத்தில் சரித்திரபதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளாா்.

சுமாா் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, மோனு மற்றும் அவரது கூட்டாளிகள் லம்பாவை கத்தியால் தாக்கியனா். அதன்பிறகு அவா்கள் தலைமறைவாகிய நிலையில், உள்ளூா் காவல் துறையினருடன் கடந்த ஜூன் 28-ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடா்ந்து லம்பா மற்றும் ரித்திக் கைது செய்யப்பட்டனா். அதன்பிறகு ஆதித்யாவை காவல் துறையினா் தேடி வந்தனா்.

துவாரகா மோா் அருகே அவா் இருப்பது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த காவல் துறையினா் அவரைக் கைதுசெய்ய முயன்றனா். காவல் துறையினரை பாா்த்த ஆதித்யா தப்பியோடினாா். சிறிது தூரம் அவரைத் துரத்திச் சென்று காவல் துறையினா் கைதுசெய்தனா். விசாரணையில், ரிலையன்ஸ் ஸ்டோா் ஒன்றில் பணிபுரிந்தபோது சுமாா் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லம்பாவுடன் தொடா்பு ஏற்பட்டதாக விசாரணையில் அவா் தெரிவித்தாா் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.