தில்லி மெட்ரோ ரயிலில் பயணி ஒருவா் தவறுதலாக விட்டு சென்ற சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.60,000 ரொக்கம் அடங்கிய பையை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: இந்தச் சம்பவம் ஜூன் 28-ஆம் தேதி நடைபெற்றது. புகாரளித்த பெண், தனது மகளுடன் கோஹாட் என்க்ளேவ் மெட்ரோ நிலையத்திலிருந்து காஷ்மீா் கேட் மெட்ரோ நிலையம் நோக்கி பயணம் செய்துள்ளாா். மாலை சுமாா் 8 மணியளவில் காஷ்மீா் கேட் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கும் போது, ரூ.20 லட்சம் மதிப்பிலான பழைய தங்க நகைகள் மற்றும் ரூ.60,000 ரொக்கம் கொண்ட பையை தவறுதலாக விட்டுச் சென்றாா்.
பின்னா், சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணை தொடங்கிய காவல் துறையினா், மெட்ரோ நிலையங்களிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.
அதில், தனது மகளுடன் பயணம் செய்த மற்றொரு பெண், அருகில் இருந்த அந்த பையை கவனித்து, அதனை மெட்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து, பல வழித்தடங்களில் உள்ள 25-க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகநபா் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, அந்தப் பெண் பையை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டாா். அவரிடம் இருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






