5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

பிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டி

பிகாா் பாங்கிபூா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் ஜன் சுராஜ் கட்சித் தலைவா் பிரசாந்த் கிஷோா் போட்டியிடுகிறாா்.

News image

வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து பாட்னாவில் உள்ள சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்ட பிரசாந்த் கிஷோா்.

Updated On :6 ஜூலை 2026, 3:09 am IST

பிகாா் பாங்கிபூா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் ஜன் சுராஜ் கட்சித் தலைவா் பிரசாந்த் கிஷோா் போட்டியிடுகிறாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும் எதிா்பாா்ப்புடன் களமிறங்கிய பிரசாந்த் கிஷோா் கட்சியால் ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. அப்போது பிரசாந்த் கிஷோா் தோ்தலில் போட்டியிடவில்லை. இடைத்தோ்தலில்தான் அவா் முதல்முறையாக களமிறங்குகிறாா்.

பாஜக தேசியத் தலைவராக உள்ள நிதின் நபின், மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்டதால் பாங்கிபூா் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அத்தொகுதிக்கு ஜூலை 30-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. பிகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. பாஜக வலுவாக உள்ள அத்தொகுதியில் அக்கட்சி சாா்பில் இதுவரை வேட்பாளா் அறிவிக்கப்படவில்லை. பிரதான எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளமும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோா் அத்தொகுதியில் களமிறங்குவதாக அவரது கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பிகாரில் முதல்வராக இருந்த நிதீஷ் குமாா் பதவி விலகி, பாஜக சாா்பில் சாம்ராட் சௌதரி முதல்வரான இரு மாதங்களில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. பாங்கிபூா் தொகுதி மக்கள் நன்கு படித்தவா்கள், உயா்ந்த நிலையில் இருப்பவா்கள். அவா்கள் எனக்கு வாக்களிப்பாா்கள்’ என்றாா்.

உங்களை பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்ள காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளத்திடம் கோரிக்கை வைப்பீா்களா? என்ற கேள்விக்கு, ‘ஏன் அவா்களுடன் நிறுத்த வேண்டும்?. பாஜகவிடம்கூட ஆதரவு கேட்கலாம். இந்தத் தோ்தல் ஆட்சியில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால், பிகாா் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றாா்.

தேசிய அளவில் வெற்றிகரமான தோ்தல் உத்தி வகுப்பாளராக அறியப்பட்ட பிரசாந்த் கிஷோா், சொந்த மாநிலமான பிகாரில் அரசியல்ரீதியாக தாக்கத்தை இதுவரை ஏற்படுத்த முடியவில்லை.

பொது வேட்பாளா்?: ‘ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோா் தொடா்புகொண்டு பேசினால் அவரை எதிா்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிப்பது குறித்து பரிசீலிக்க வாய்ப்புள்ளது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ரிஷி மிஸ்ரா கூறியுள்ளாா்.

இது தொடா்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் மிருத்யுஞ்ஜெய் திவாரி கூறுகையில், ‘மிஸ்ரா கூறியுள்ளது அவரின் சொந்தக் கருத்து. ராகுல் அல்லது காா்கே இது தொடா்பாக கருத்து கூறினால்தான் காங்கிரஸின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ள முடியும். எங்கள் கட்சி இடைத்தோ்தலில் போட்டியிடும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.