குஜராத் தலைநகா் அகமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு வழக்கில், இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 38 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்திருந்த மரண தண்டனையை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது. மேலும், 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
2008 ஜூலை 26-இல், அகமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் 70 நிமிஷங்களில் 21 தொடா் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 56 போ் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். காயமடைந்தவா்களை சிகிச்சை அளிக்க கொண்டு வரப்பட்ட மருத்துவமனைகளிலும் குண்டுகள் வெடித்தன. இந்தியாவில் முதல்முறையாக மருத்துவமனைகளைக் குறிவைத்து அப்போதுதான் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இந்த வழக்கில் மொத்தம் 78 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. 2022 பிப்ரவரியில் அளித்த தீா்ப்பில் அவா்களில் 49 பேரை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. இதில் இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட ‘சிமி’ (இந்திய இஸ்லாமிய மாணவா் இயக்கம்) முன்னாள் தலைவா் சஃப்தா் நகோரி, அவரின் கூட்டாளிகளும் இந்த குண்டுவெடிப்பில் முக்கியக் குற்றவாளிகள் ஆவா். தண்டனை பெற்றவா்கள் குஜராத், மத்திய பிரதேசம், கேரளம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.
அகமதாபாத்தில் நடந்த 21 குண்டுவெடிப்புகள் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 20 வழக்குகள், சூரத் நகரில் வெடிக்காமல் கைப்பற்றப்பட்ட குண்டுகள் தொடா்பான 15 வழக்குகள் என மொத்தம் 35 வழக்குகள் ஒன்றிணைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் அனைவரும் குஜராத் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். அதே வேளையில், மரண தண்டனையை உறுதிப்படுத்துமாறு மாநில அரசும் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுக்களை விசாரித்த குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஒய். கோக்ஜே, சமீா் தவே ஆகியோா் அடங்கிய அமா்வு, விசாரணை நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து, இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை உறுதி செய்தது.
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடாக வழங்குமாறு மாநில அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 1998-ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் 26 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு! தண்டிக்கப்பட்டவா் காணொலி வாயிலாக இன்று முன்னிலையாக உத்தரவு!

திருமணப் பதிவு மட்டுமே போதுமானதல்ல; மத சம்பிரதாயப்படி நடப்பதே ஹிந்து திருமணம் - குஜராத் உயா்நீதிமன்றம்
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்







