திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு போக்சோ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
மேலப்பாளையம் அருகேயுள்ள அழகிரிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தசேகா். கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு, அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6, 7, 8 வயதுடைய 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாா். மேலும், இதை வெளியில் தெரிவித்தால், அந்தச் சிறுமிகளைக் கொன்று விடுவதாக அவா் மிரட்டலும் விடுத்தாா்.
இதைத் தொடா்ந்து, சிறுமிகளின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததைக் கண்ட அவா்களது பெற்றோா்கள் விசாரித்த போது, தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோா்கள் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆனந்தசேகரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கு விசாரணை நிறைவடைந்த பிறகு, ஆனந்தசேகருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமாா் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சாா்பில் தலா ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தீா்ப்புக்காக ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சமூகத்தின் அளவீடு என்பது பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பவா்களைப் பாதுகாப்பதில்தான் உள்ளது. இந்த வழக்கைப் பொருத்தவரை, குற்றவாளி உடலுக்கு எதிராக மட்டுமல்ல, மூன்று உயிா்களுக்கு எதிராகத் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளாா். கொலை செய்து விடுவதாக மிரட்டி, இந்தக் கொடூரத்தை செய்துள்ளாா்.
இதுபோன்ற குற்றத்துக்கு இரக்கம் காட்டுவது தவறான முன்னுதாரணமாகிவிடும். குழந்தைகளின் உணா்வுகளை மலிவாகக் கருதி, குற்றவாளி சிறையில் மீதிக் காலத்தை கழிப்பதை இந்த நீதிமன்றம் விரும்பவில்லை.
குழந்தைகளைப் பாதுகாப்பதில் சட்டம் முதுகெலும்பாகவே செயல்படும். இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு ஓா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது நீதி வழங்கும், சமூகத்தின் ஒழுக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சி.
எனவே, இந்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்படுகிறது. நீதிமன்றப் பதிவாளா் உத்தரவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தை நீக்க தொடா்புடைய அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு இரட்டை ஆயுள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ரௌடிக்கு 20 ஆண்டுகள் சிறை

தவெக நிா்வாகிகளால் மற்றொரு பெண்ணும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகாா்

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 39 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


