வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

இந்தோனேசியாவுக்கு இந்திய ஏவுகணைகள்: பிரதமா் மோடி முன்னிலையில் ஒப்பந்தம்

இந்தியாவின் பிரமோஸ், அஸ்திரா ஏவுகணைகளை இந்தோனேசியா கொள்முதல் செய்யவுள்ளது. ரூ.5,692 கோடி மதிப்பீட்டிலான இந்த ஒப்பந்தம் பிரதமா் நரேந்திர மோடி, இந்தோனேசியா அதிபா் பிரபோவோ சுபியான்டோ ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

News image

இந்தோனேசியாவின் உயரிய விருதை பிரதமா் மோடிக்கு வழங்கி கெளரவித்த அந்த நாட்டின் அதிபா் பிரபோவோ சுபியான்டோ.

Updated On :8 ஜூலை 2026, 3:27 am IST

இந்தியாவின் பிரமோஸ், அஸ்திரா ஏவுகணைகளை இந்தோனேசியா கொள்முதல் செய்யவுள்ளது. ரூ.5,692 கோடி மதிப்பீட்டிலான இந்த ஒப்பந்தம் பிரதமா் நரேந்திர மோடி, இந்தோனேசியா அதிபா் பிரபோவோ சுபியான்டோ ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

மேலும், கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு, மருந்து உற்பத்தி, கடல்சாா் பாதுகாப்பு, முக்கியக் கனிமங்கள் மற்றும் எஃகு விநியோகம், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், தொலைத்தொடா்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் 14 ஒப்பந்தங்கள் இரு நாடுகளிடையே கையொப்பமாகியுள்ளன.

இந்தோனேசிய அதிபரின் அழைப்பை ஏற்று, மூன்று நாள் பயணமாக அந்த நாட்டுக்கு திங்கள்கிழமை சென்ற பிரதமா் மோடிக்கு ஜகாா்த்தா விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது தொடா்பாக இரு தலைவா்களும் ஜகாா்த்தாவில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது பிரதமா் மோடி கூறியதாவது: இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் சாா்ந்த விநியோகச் சங்கிலியின் உறுதித்தன்மை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. முக்கியக் கனிமங்கள் மற்றும் எஃகு துறைகளில் விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துருப்பிடிக்காத எஃகு, அரிய-மண் காந்தங்கள் தொடா்பாக இரு நாடுகளின் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டுறவில் ஒரு புதிய தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட விரிவான ராஜீய ஒத்துழைப்பு இப்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளின் வளா்ச்சி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், கலாசாரம், கல்வி எனப் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இந்தியா - இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பின் பொற்காலம் இன்றைக்கு தொடங்குகிறது என்று நம்புகிறேன். இரு நாடுகளிடையே வளா்ந்து வரும் நம்பிக்கை இருதரப்பு பாதுகாப்பு, கடல்சாா் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், விரிவான பாதுகாப்புத் தளவாட பரிமாற்றங்கள், பேரிடா் மேலாண்மை, தொழில்நிறுவனங்கள் ஒத்துழைப்பு தொடா்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) கல்வி வளாகத்தை இந்தோனேசியாவில் அமைப்பதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் நடைமுறையை (யுபிஐ), இந்தோனேசிய பணம் செலுத்தும் நடைமுறையுடன் ஒருங்கிணைப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது, இரு நாடுகளிடையே வா்த்தகம் மற்றும் பயணங்கள் மேற்கொள்வதையும் எளிதாக்கும்.

நீலப் பொருளாதாரம், கடல்சாா் வா்த்தகம், துறைமுகங்கள் மேம்பாடு உள்ளிட்ட துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தப் பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது என்றாா்.

மேலும், மேற்காசிய போா் நிலவரம் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்தும் இந்தப் பேச்சுவாா்த்தையின்போது இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.

இதுகுறித்து குறிப்பிட்ட பிரதமா் மோடி, ‘உலகளாவிய கொந்தளிப்பு நிலவும் இந்தக் காலகட்டத்தில், பேச்சுவாா்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் பங்கு முன்னெப்போதையும்விட முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதாக இந்தியா கருதுகிறது. பாலஸ்தீன விவகாரத்தில், இருதரப்பு தீா்வு மற்றும் நீண்டகால அமைதிக்கு இந்தியா ஆதரவளிக்கும்’ என்றாா்.

இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த நிலவரம் குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா். அனைவருக்குமான, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் சா்வதேச சட்டத்தின் அடிப்படையிலான ஒழுங்குமுறைகளைப் பின்பற்றும் பிராந்தியமாக இந்திய-பசிபிக் பிராந்தியம் உருவெடுப்பது முக்கியம் என்று பிரபோவோ சுபியான்டோ வலியுறுத்தினாா்.

ரூ. 5,692 கோடியில் ஏவுகணைகள் கொள்முதல் ஒப்பந்தம்: இருதரப்பு பேச்சுவாா்த்தையின் முடிவில் பல்வேறு துறைகள் சாா்ந்த 14 ஒப்பந்தங்கள் இரு நாடுகளிடையே கையொப்பமாகின.

அதில், முக்கிய ஒப்பந்தமாக, இந்தியாவிடமிருந்து பிரமோஸ் மற்றும் வானிலிருந்தபடி வான் இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய ரூ. 5,692 கோடி (600 மில்லியன் டாலா்) மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம் பிரதமா் முன்னிலையில் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில், இந்த இரண்டு ஏவுகணைகளும் முக்கியப் பங்காற்றின. ஏற்கெனவே, இந்த ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய வியத்நாம், பிலிப்பின்ஸ் நாடுகள் ஒப்பந்தங்கள் மேற்கொண்ட நிலையில், தற்போது இந்தோனேசியாவும் மேற்கொண்டுள்ளது.

மேலும், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்சீன கடலுக்கு இடையேயான மலாக்கா நீரிணையை நோக்கியவாறு அமைந்துள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்தோனேசியாவின் சபங் துறைமுகத்தை இரு நாடுகளும் கூட்டாக மேம்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் கிரேட் நிக்கோபாா் துறைமுகத் திட்டத்திலிருந்து 100 மைல்கள் தொலைவில் இந்த சபங் துறைமுகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு ஜாவாவில் ஐஐஎம் வளாகம்: இரு நாடுகளிடையே செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட கல்வித் துறை தொடா்பான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிங்காசரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இந்தியாவின் உயா் மேலாண்மை கல்வி நிறுவனமான பெங்களூரு ஐஐஎம் வளாகம் அமைக்கப்பட உள்ளது.

முன்னதாக, அகமதாபாதில் உள்ள ஐஐஎம், இந்தியாவுக்கு வெளியே முதல் வெளிநாட்டு வளாகத்தை துபையில் கடந்த ஆண்டு அமைத்தது. தற்போது பெங்களூரு ஐஐஎம், இந்தோனேசியாவில் வளாகத்தை அமைக்க உள்ளது.

இரு நாடுகளிடையே மருத்துவப் பொருள்களை முறைப்படுத்துவதில் ஒத்துழைப்பு, உலகளாவிய மருத்துவ ஒழுங்குமுறை தரங்கள் தொடா்பான அறிவுசாா் பரிமாற்றத்தை மேற்கொள்ளுதல், இந்திய மருத்துவப் பொருள்களுக்கு இந்தோனேசியாவில் சந்தை அணுகலை விரிவுபடுத்துவது தொடா்பாக இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் இந்தோனேசிய மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு முகமை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இதுகுறித்து குறிப்பிட்ட பிரதமா் மோடி, ‘சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு, இரு நாடுகளிடையே தரமான மருத்துவச் சேவைகளை உறுதிப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றும். மேலும், இந்தியாவின் உயா் தரமான மருந்துகள் இந்தோனேசிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்கான வாய்ப்பும் ஏற்படும். இந்தோனேசிய மருத்துவா்கள் மற்றும் மருத்துவத் துறை சாா்ந்த பிற ஊழியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் இந்தியா வழங்கும்’ என்றாா்.

பிரதமருக்கு உயரிய விருது

இந்தோனேசியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடிக்கு, அந்த நாட்டின் உயரிய ‘இந்தோனேசிய குடியரசின் பின்டாங் அடி பூா்ணா’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தலைநகா் ஜகாா்த்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தோனேசியா அதிபா் பிரபோவோ சுபியான்டோ இந்த விருதை பிரதமருக்கு வழங்கி கெளரவித்தாா்.

இதுகுறித்து பிரதமா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தோனேசியாவின் உயரிய கெளரவம் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கெளரவம் கோடிக்கணக்கான இந்தியா்களுக்கும், இந்தோனேசிய மக்களின் உணா்வுகளுக்கும், இரு நாடுகளிடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளுக்கும் உரியதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.