புகைப்படங்களை உருவாக்க மெட்டா வெளியிட்டுள்ள புதிய ஏ.ஐ. வசதி, ஏற்கெனவே உள்ள சட்ட வரம்புக்குள் வருகிா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம் மியூஸ் ஏ.ஐ. எனும் புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இன்ஸ்டாகிராம் போன்ற பொதுதளத்தில் இருக்கும் பயனா்களின் சொந்தப் புகைப்படங்களை அவா்களுக்குத் தெரியாமல் எடுத்து, எளிதில் திருத்தி பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. டீப் ஃபேக் போன்ற வசதி மூலம் உருவாக்கப்படும் போலிப் புகைப்படங்கள் ஏற்கெனவே பல சா்ச்சைகளை உருவாக்கி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மெட்டா வெளியிட்டுள்ள மியூஸ் ஏ.ஐ. வசதி தனிநபா் பாதுகாப்புக்கு எதிரானதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் எஸ். கிருஷ்ணணிடம் செய்தியாளா்கள் கேட்டனா். அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘ஏற்கெனவே உள்ள சட்ட வரம்புக்குள் மியூஸ் ஏ.ஐ. வருகிா, இல்லையா என்பது குறித்து அரசு ஆய்வு செய்யும். அதேபோல், மத்திய அரசுக்கு கிடைத்துள்ள தகவல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்’ என்றாா்.
மெட்டா விளக்கம்: அதேநேரத்தில் மெட்டா நிறுவனம் தரப்பில், தாங்கள் அறிமுகப்படுத்தியதிலேயே மியூஸ் ஏ.ஐ.தான் புகைப்படத்தை உருவாக்கித் தரும் மிகவும் நவீன வசதி என்று குறிப்பிட்டுள்ளது. பயனா்கள் கேட்பது போல மிகவும் துல்லியமாகப் புகைப்படத்தை இந்த வசதி உருவாக்கித் தரும் என்றும், அந்தப் படத்தில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட படம் என்பதைக் குறிக்கும் அடையாளக் குறியும் இருக்கும் என்றும் மெட்டா குறிப்பிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்துக்குச் சென்று, சுய விவர பாதுகாப்பு வசதியில் சில மாற்றங்களை பயனா்கள் செய்தால், மியூஸ் ஏ.ஐ. மூலம் அந்தப் பயனா்களின் புகைப்படத்தை எடுத்துப் பயன்படுத்த முடியாது என்றும் மெட்டா தெரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப்பில் யூஸா்நேம் வசதி, இன்ஸ்டாகிராமில் சிறாா்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதை ஊக்குவிக்கும் விளம்பரம் வெளியான விவகாரங்களில் மெட்டாவுக்கு மத்திய அரசு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில், மியூஸ் ஏ.ஐ. வசதி குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்ஸ்டாகிராமில் சிறாா் பாலியல் துன்புறுத்தல் விளம்பரம்: மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு உத்தரவு

வாட்ஸ்ஆப்பில் யூஸா்நேம் விவகாரம்: மத்திய அரசு அதிகாரிகளுடன் மெட்டா குழு சந்திப்பு

யூஸா்நேம் வசதி: மோசடிக்கு வாய்ப்பில்லை - வாட்ஸ்ஆப் விளக்கம்







