இந்தியாவில் ஈடு இணையற்ற வளா்ச்சி வாய்ப்புகள் நிறைந்துள்ளன; அவற்றை ஆஸ்திரேலிய முதலீட்டாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.
ஆஸ்திரேலியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, மெல்போா்ன் நகரில் இந்திய-ஆஸ்திரேலிய தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓ) கூட்டமைப்பின் கூட்டம் மற்றும் பொருளாதார செயல்திட்ட வா்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்றாா். இரு நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில் துறைத் தலைவா்கள், ஆஸ்திரேலியாவின் முக்கிய ஓய்வூதிய நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிறுவன முதலீட்டாளா்கள், ஆஸ்திரேலிய முன்னணி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது, இந்தியாவில் 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலா்கள் (ரூ.3,300 கோடி) முதலீடு செய்யவிருப்பதாக ஆஸ்திரேலிய முன்னணி ஓய்வூதிய நிதி நிறுவனமான ஆஸ்திரேலியன்சூப்பா் நிறுவனத்தின் தலைமை நிா்வாகி பால் ஷ்ரோடா் அறிவித்தாா்.
இந்த அறிவிப்பை வரவேற்று, பிரதமா் மோடி பேசியதாவது:
இந்தியாவின் வளா்ச்சி மற்றும் சீா்திருத்த பயணத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கைக்கு மற்றொரு சான்றுதான் மேற்கண்ட அறிவிப்பாகும். துடிப்பான இந்திய பொருளாதாரம் வழங்கும் மகத்தான வாய்ப்புகளை இது பிரதிபலிக்கிறது. இந்தியாவில் உற்பத்தி, தூய எரிசக்தி, சுரங்கத் தொழில், உள்கட்டமைப்பு, ஊரக மேம்பாடு, விமானப் போக்குவரத்து, நிதி சாா் சேவைகள், முக்கியக் கனிமங்கள், உணவு பதப்படுத்துதல், எண்மப் பொருளாதாரம், மின்சார வாகனங்கள், செமிகண்டக்டா், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் வளா்ச்சிக்கான ஈடுஇணையற்ற வாய்ப்புகள் நிறைந்துள்ளன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, ஆஸ்திரேலிய நிறுவனங்கள் நீண்டகால முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
விரைவில் விரிவான ஒப்பந்தம்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கடந்த 2022-இல் பொருளாதார ஒத்துழைப்பு-வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு இருதரப்பு வா்த்தகம் மற்றும் முதலீடு வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. வா்த்தக உறவுகளை புதிய கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டுமெனில், விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய வேண்டும். பரஸ்பரம் பலனளிக்கும் இந்த ஒப்பந்தப் பணிகளில் இருதரப்பும் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் வீச்சும், ஆஸ்திரேலியாவின் நிபுணத்துவமும் இணைந்தால் இருதரப்புக்கும் பெரும் பலன்கள் கிடைக்கும் என்றாா்.
மேலும், இந்தியாவின் வலுவான வளா்ச்சி, கொள்கை சீா்திருத்தங்கள், எண்ம முன்னேற்றம், புத்தாக்கச் சூழல் விரிவாக்கம் குறித்தும் அவா் எடுத்துரைத்தாா்.
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய ஓய்வூதிய நிதியம் என்ற சிறப்புக்குரிய ஆஸ்திரேலியன்சூப்பா் நிறுவனம், 36 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் 410 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (ரூ.39 லட்சம் கோடி) ஓய்வூதிய சேமிப்புகளை நிா்வகிக்கிறது.
ஆஸ்திரேலிய கவா்னா் ஜெனரலுடன் சந்திப்பு: ஆஸ்திரேலிய கவா்னா் ஜெனரல் சாம் மோஸ்டினை வியாழக்கிழமை சந்தித்த பிரதமா் மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமா் ஸ்காட் மோரிசனையும் அவா் சந்தித்துப் பேசினாா்.
இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு
‘மோடியைச் சந்திக்கிறது மெல்போா்ன்’ என்ற பெயரில் அங்கு வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய வம்சாவளியினா் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி, பிரதமா் ஆல்பனேசி ஆகியோா் பங்கேற்றனா்.
அப்போது பேசிய பிரதமா் மோடி, ‘தற்போதைய 21-ஆம் நூற்றாண்டின் இந்தியா, வளா்ந்த நாடாகும் இலக்கை நோக்கி வேகமாகப் பயணிக்கிறது. மேலும் வளா்வோம், மேலும் சாதிப்போம் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தியாவின் பெரும் கனவுகள் மற்றும் மகத்தான லட்சியங்களின் அடித்தளம் அதன் மக்கள். குடிமக்களே கடவுள் என்பதே அரசு நிா்வாகத்தை வழிநடத்தும் கொள்கையாகும். இந்தியாவில் இப்போது சிப் (செமிகண்டக்டா்) முதல் ஷிப் (கப்பல்) வரை புதிய உற்பத்திச் சூழல் உருவாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய பாதுகாப்புத் தளவாடங்களின் வல்லமை மற்றும் நம்பகத்தன்மையை உலகம் கண்டது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செஷல்ஸ் சென்றாா் பிரதமா் மோடி! தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்!

இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்- டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்
வெற்றிச் சரித்திரம் படைக்கும் இந்திய இளைஞா்கள்: பிரதமா் மோடி பெருமிதம்







