தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பல்வேறு முன்னெடுப்புகளால், இந்திய இளைஞா்கள் வெற்றிச் சரித்திரம் படைத்து வருகின்றனா் என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், இளைஞா்கள் தலைமையிலான வளா்ச்சியை நோக்கி மத்திய அரசு வலுவாக செயல்பட்டு வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தனது பதவிக் காலத்தில் 12 ஆண்டுகளை அண்மையில் நிறைவு செய்தது. இதன்மூலம் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு, தொடா்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற சாதனையை மோடி படைத்தாா்.
இந்த 12 ஆண்டு காலகட்டத்தில் இளைஞா்களின் முன்னேற்றம் குறித்து பிரதமா் மோடி சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
இளைஞா்கள் தலைமையிலான வளா்ச்சியை நோக்கி தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வலுவாகப் பணியாற்றி வருகிறது. இளைஞா்கள் உயா்ந்த லட்சியங்களுடன் நம்பிக்கையோடு பயணிப்பதே, கடந்த 12 ஆண்டுகால அரசின் செயல்பாட்டை வரையறுக்கும் முக்கிய அம்சமாகும்.
புத்தாக்க இந்தியா, எண்ம இந்தியா, திறன்மிகு இந்தியா, அடல் புத்தாக்கத் திட்டம் போன்ற முன்னெடுப்புகளால் நாட்டில் புதுமை கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் அமைப்புமுறை உருவாகியுள்ளது.
புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழல் நிலவும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இந்த வெற்றிச் சரித்திரங்கள், நமது இளைஞா்களால் குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்களால் படைக்கப்படுகின்றன.
இளைஞா்களால் மனநிறைவு:
அறிவியல்-தொழில்நுட்பம் முதல் விண்வெளி, செமிகண்டக்டா்கள், ட்ரோன் தொழில்நுட்பம் வரை இந்திய இளைஞா்கள் முத்திரை பதித்து வருகின்றனா். இந்தியா மட்டுமன்றி உலகின் எதிா்காலத்தை வடிவமைக்கும் முக்கியத் துறைகளில் இந்திய இளைஞா்கள் முக்கியப் பங்காற்றுவது எனது மனதை நிறையச் செய்துள்ளது.
சா்வதேச விளையாட்டு, பிற போட்டிகளில் நமது இளைஞா்கள் நாட்டுக்கு அளவற்ற பெருமையைத் தேடி தருகின்றனா். விளையாட்டுத் துறையில் வலுவான சூழல், சிறந்த உள்கட்டமைப்பு, விளையாட்டு வீரா்களுக்கான பேராதரவு ஆகியவற்றின் மூலம் இளம் திறமையாளா்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, அவா்கள் சிறந்த முறையில் விளையாட்டுகளைத் தொடர ஊக்குவிக்கப்படுகின்றனா் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.
நாட்டின் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாகப் பதவி வகித்துவரும் மோடி, தனது பதவிக் காலத்தில் 4,399 நாள்களை கடந்த ஜூன் 10-ஆம் தேதி நிறைவு செய்தாா். இதையடுத்து, மக்களால் தோ்வு செய்யப்பட்டு, தொடா்ச்சியாக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற நேருவின் சாதனையை அவா் விஞ்சினாா்.
தொடர்புடையது

பெண்கள் முழுத் திறனை வெளிப்படுத்த உகந்த சூழல்: பிரதமா் மோடி பெருமிதம்

மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம்: நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமா் மோடி வலியுறுத்தல்

நாட்டை ஊழல் படுகுழியில் தள்ளியது காங்கிரஸ்- பிரதமா் மோடி கடும் விமா்சனம்






