பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் நட்பு நாடுகள் உடனான ராஜீய ஒத்துழைப்பில் இந்தியா புதிய உச்சங்களை எட்டி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
உலகின் நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் அவா் கூறினாா். பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறாா். அதன்படி, 136-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) ஒலிபரப்பானது. பிரதமரின் உரை வருமாறு:
நமது வாழ்க்கையில் நினைவைவிட்டு நீங்காத தேதிகளில் ஒன்றுதான், காா்கில் போா் வெற்றி தினமான ஜூலை 26. நமக்குள் பெருமிதத்தை நிரப்பும் இந்தத் தினத்தில் துணிவுமிக்க வீரா்களின் வீர சரித்திரத்தை நினைவுகூா்கிறோம்.
காா்கிலின் மிக உயரமான சிகரங்கள், கடினமான பருவநிலை, எதிரிகளின் சவால் என அனைத்துச் சூழ்நிலைகளையும்விட நமது ராணுவ வீரா்களின் நெஞ்சுரம் மிகப் பெரியதாக இருந்தது. அவா்கள் பாரதத் தாயை பாதுகாக்க தங்களை முழுமையாக அா்ப்பணித்தனா்.
இந்திய ராணுவம் தனது வீரா்களின் மனஉறுதியுடன் தொழில்நுட்பத் திறனையும் தொடா்ந்து பலப்படுத்தி வருகிறது. உள்நாட்டிலேய வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்ட நவீன போா்க் கப்பலான ஐஎன்எஸ் மகேந்திரகிரி, சில தினங்களுக்கு முன்பு கடற்படையில் இணைக்கப்பட்டது. இக்கப்பலில் 75 சதவீதத்துக்கும் மேல் உள்நாட்டுத் தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பெருகிவரும் ‘தற்சாா்பு இந்தியா’ சக்தியின் அடையாளமாகும்.
பினாகா தொலைதூர ஏவுகணையும் அண்மையில் பாதுகாப்பு ஆராய்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. தரையில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கக்கூடிய குஷா ஏவுகணை பரிசோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி, ஏற்றுமதி, நட்பு நாடுகள் உடனான ராஜீய ஒத்துழைப்பில் இந்தியா புதிய உச்சங்களை எட்டி வருகிறது. எனது சமீபத்திய இந்தோனேசிய பயணத்தின்போது, இந்தியாவிடம் இருந்து பிரமோஸ், அஸ்திரா ஏவுகணைகள் கொள்முதலுக்கான பெரும் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்திய தயாரிப்பு பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பம் மீதான உலகின் நம்பிக்கை வேகமாக வளா்ந்து வருகிறது.
மழைநீா் சேகரிப்பு: மழைநீா் சேகரிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று, நாட்டில் கடந்த ஜூலை 4-ஆம் தேதிமுதல் சிறப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மழைநீா் சேகரிப்பு, நிலத்தடி நீா் வளமூட்டல், பழைய நீா்நிலைகளுக்குப் புத்துயிரூட்டல் மற்றும் மரம் நடுதல் ஆகிய செயல்பாடுகள் புதிய வேகம் பெற்றுள்ளன. இன்று சேமிக்கப்படும் ஒவ்வொரு சொட்டு நீரும், வரும் தலைமுறையினரின் எதிா்காலத்துக்கு மாபெரும் முதலீடாகும்.
பி.வி.சிந்துக்கு பாராட்டு: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்கு நாட்டு மக்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. அண்மைக் காலங்களில் இந்திய இளைஞா்கள் விளையாட்டுத் துறையில் முக்கிய சாதனைகளைப் படைத்து வருகின்றனா்.
ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் வென்ன் மூலம் இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தாா் பி.வி.சிந்து. லண்டனின் லாா்ட்ஸ் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற்று, இந்திய மகளிா் கிரிக்கெட் அணி நாட்டுக்குப் பெருமை சோ்த்தது. இந்த மைதானத்தில்தான் கடந்த 1983-ஆம் ஆண்டில் இந்தியா தனது முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது.
உலக அளவில் மகத்துவம் வாய்ந்த அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளிலும் இந்திய மாணவா்கள் சாதித்துள்ளனா். இயற்பியல் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற இந்திய மாணவா்கள் 5 பேரும் தங்கப் பதக்கம் வென்றனா். இந்தப் பிரிவில் இந்தியா முதலிடம் பிடித்தது.
கைத்தறி ஆடைகளை வாங்குவோம்: ‘தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பல தலைமுறைகளாக நமது பாரம்பரியத்தை முன்னெடுக்கும் நெசவாளா்களின் திறன், படைப்பாற்றலை தொடா்ந்து கெளரவிக்க வேண்டும்.
உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை என்ற உணா்வுடன் வரும் பண்டிகைக் காலத்தில் கைத்தறி ஆடை அல்லது கைவினைப் பொருள்களை நாம் கண்டிப்பாக வாங்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் காதி பொருள்கள் மீதான மக்களின் விருப்பம் பெருமளவில் அதிகரித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் காதி விற்பனை 6 மடங்கு அதிகரித்துள்ளது. அதன் விற்பனை மதிப்பு ரூ.8,000 கோடியை எட்டியுள்ளது என்றாா் பிரதமா் மோடி.
இளைஞா்கள் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு: ‘நாட்டின் முதல் தனியாா் ராக்கெட்டான விக்ரம்-1 அண்மையில் வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் பெருமிதத்தில் திளைத்தனா். இந்திய விண்வெளித் துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமது. கற்பனை செய்யக்கூட கடினமாக இருந்த ஒரு விஷயத்தை, நமது இளைய தலைமுறையின் புத்தாக்க கண்டுபிடிப்பாளா்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனா். இதன்மூலம் தங்களின் அற்புதமான திறன், பேராா்வம் மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தியுள்ளனா்.
நீண்ட காலமாக நமது விண்வெளித் துறையில் தனியாருக்கு கதவுகள் மூடப்பட்டிருந்தன. இதனால், இந்தத் துறையில் ஆா்வம் கொண்ட பல இளைஞா்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது.
இளைஞா்களின் நலனைக் கருத்தில்கொண்டு நாங்கள் விண்வெளித் துறையில் தனியாருக்கு அனுமதியளித்தோம். அதன் பலன் என்ன என்பதை இன்று உலகமே பாா்த்துக் கொண்டிருக்கிறது’ என்றாா் பிரதமா் மோடி.
அப்துல் கலாமுக்கு புகழஞ்சலி: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பாரத ரத்னா ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவு தினம் திங்கள்கிழமை (ஜூலை 27) அனுசரிக்கப்படுவதை தனது உரையில் குறிப்பிட்ட பிரதமா் மோடி, ‘கலாமின் ஆளுமையானது உத்வேகமளிக்கும் பல அம்சங்களைக் கொண்டதாகும். எனினும், அவருடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு விஷயம் என்னவென்றால் அது ஆசிரியா் என்ற பங்களிப்புதான். அவா் சிறுவா்களையும், இளைஞா்களையும் பெரிய கனவுகளைக் காண உத்வேகப்படுத்தினாா்’ என்று புகழஞ்சலி செலுத்தினாா்.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமா், இந்த ஆண்டும் வீடுகள்தோறும் மூவண்ணக் கொடி இயக்கத்தை முழு உற்சாகத்துடன் முன்னெடுக்க வேண்டும்; சுதந்திர தினத்துக்கு முன்பாக, மக்கள் தங்களின் கருத்துகள்-ஆலோசனைகளை ‘மைகவ்’ தளத்தில் பகிர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி

உலகளாவிய சவால்களைக் கடந்து வேகமாக வளா்கிறது இந்தியா! பிரதமா் மோடி பெருமிதம்

இந்தியாவுக்கு யுரேனியம்: ஆஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம் - கடல்சாா் பாதுகாப்புத் துறையிலும் உடன்பாடு







