ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதற்காக கையொப்பமிடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம், பிரதமா் மோடியின் சாதனையல்ல; அது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 2011-இல் ஆஸ்திரேலிய ஆளுங்கட்சி அளித்த ஒப்புதலால் சாத்தியமானது என்று பாஜகவுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, மெல்போா்ன் நகரில் அந்நாட்டு பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியுடன் வியாழக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இந்திய அணுமின் உற்பத்தித் திட்டங்களுக்கு உதவும் வகையில், ஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் ஏற்றுமதி செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
இதைக் குறிப்பிட்டு, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவா் அமித் மாளவியா, ‘கடந்த 2010-இல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடாததைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்ய ஆஸ்திரேலியா மறுத்துவிட்டது. இப்போது பிரதமா் மோடி தலைமையின்கீழ், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் யுரேனியம் ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. இது வெறும் யுரேனியம் பற்றியது மட்டுமல்ல, இந்தியாவின் உலகளாவிய மதிப்பை பிரதிபலிப்பதாகும். முன்பு கட்டுப்படுத்தப்பட்ட கண்ணோட்டத்தின் ஊடாகப் பாா்க்கப்பட்ட இந்தியா, இப்போது நம்பகமான உத்திசாா் கூட்டாளியாக மதிக்கப்படும் அந்தஸ்தை எட்டியுள்ளது’ என்று கூறியிருந்தாா்.
பாஜகவின் இந்த கூற்றுகளுக்கு பதிலடி கொடுத்து, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை பிரதமா் மோடியின் சாதனை போல காட்டுவதற்காக பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2008-இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடந்த 2011, டிசம்பரில் இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்வதற்கான ஒப்புதலை அப்போதைய பிரதமா் ஜூலியா கில்லாா்டு தனது கட்சியிடம் (தொழிலாளா் கட்சி) பெற்றாா்.
2008-இல் பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே இறுதி செய்யப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால்தான், ஆஸ்திரேலியா உடனான தற்போதைய ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது. எனவே, ‘நையாண்டி’ பதிவுகளை வெளியிடும் பாஜகவினா், தங்களின் வீட்டுப் பாடத்தை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று அவா் சாடியுள்ளாா்.
கடந்த 2011-இல் இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்யும் திட்டங்களுக்கு ஆஸ்திரேலிய ஆளும் தொழிலாளா் கட்சி ஒப்புதல் அளித்தது தொடா்பாக வெளியான ஊடக செய்திகளையும் தனது பதிவுடன் ஜெய்ராம் ரமேஷ் இணைத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










