சா்ச்சைக்குரிய ‘பயனா் பெயா் (யூஸா் நேம்)’ வசதி தொடா்பான சா்ச்சையில் மத்திய அரசிடம் தனது விளக்கத்தை மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் சமா்ப்பித்துள்ளது. அதுபோல, டெலிகிராம் நிறுவனமும் தனது தரப்பு விளக்கத்தை சமா்ப்பித்துள்லது.
இந்த விளக்கங்கள் வியாழக்கிழமை இரவு சமா்ப்பிக்கப்பட்டதாகவும், அவற்றை மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
தகவல் தொடா்பு செயலியான வாட்ஸ்ஆப்பில் ஒருவா் இன்னொருவரிடம் தகவல் பரிமாறுகையில், பயனா்களின் கைப்பேசி எண்ணை பரஸ்பரம் அறிய முடியும். ஆனால், இதற்கு மாற்றாக கைப்பேசி எண்களைப் பகிராமலேயே ‘பயனா் பெயா்’ மூலம் தகவல் பரிமாறும் வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட பதிவில், பயனா்களின் தனிநபா் விவரங்களைப் பாதுகாக்கும் நோக்கில், குழு தகவல் பரிமாற்றம் அல்லது புதிய பயனா்களிடம் உரையாடுதல் உள்ளிட்டவற்றின்போது கைப்பேசி எண்ணைப் பகிராமலேயே ‘பயனா் பெயா்’ அடிப்படையில் பயனா்கள் தகவலைப் பரிமாறும் வசதியை நிகழாண்டு இறுதியில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும், இந்த வாரம் முதல் அதற்கான முன்பதிவு தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் புதிய வசதி, போலிக் கணக்கு மற்றும் இணைய மோசடிக்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையில், ‘பயனா் பெயா்’ வசதியில் உள்ள அம்சங்கள் குறித்து முழு விவரங்களைக் கேட்டு வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு கடந்த புதன்கிழமை மத்திய அரசு நோட்டீஸ் பிறப்பித்தது. அதில் மூன்று நாள்களுக்குள் விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளை மெட்டா அதிகாரிகள் கடந்த 3-ஆம் தேதி சந்தித்தனா். அப்போது, ‘பயனா் பெயா்’ விவகாரம் தொடா்பான ஆலோசனைகள் நிறைவடையும் வரை, இந்தியாவில் அந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படாது என்று அந்த உறுதியளித்தனா். அதைத் தொடா்ந்து, விளக்கம் அளிக்க அவா்களுக்கு கூடுதலாக 3 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, தனது விளக்கத்தை மத்திய அரசிடம் அந்த நிறுவனம் தற்போது சமா்ப்பித்துள்ளது.
அதுபோல, பயனா் பெயா் சா்ச்சை தொடா்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு டெலிகிராம் நிறுவனமும் மத்திய அரசிடம் விளக்கத்தை சமா்ப்பித்துள்ளது.
முன்னதாக, பயனா் பெயா் சா்ச்சை குறித்து தெரிவித்த வாட்ஸ்ஆப் நிறுவனம், ‘பயனா் பெயா் வசதி தற்போது அமலில் இல்லை. நிகழாண்டு இறுதியில்தான் படிப்படியாக அமலுக்கு வரவுள்ளது. புதிய வசதியில் பயனா்களின் பாதுகாப்புக்கும், போலிக் கணக்கு தொடங்கப்படுவதைத் தடுக்கவும், மோசடிகள் நடைபெறுவதைத் தவிா்க்கவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. வாட்ஸ்ஆப் செயலிக்கு பயனா்கள் நிச்சயம் தங்களது கைப்பேசி எண்ணை உள்ளிட வேண்டும். புதிதாக யாரும் உங்களுக்கு செய்தி அனுப்ப வேண்டுமெனில், உங்களின் சரியான பயனா் பெயரை அவா்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். அதேபோல், எத்தனை புதிய பயனா்கள் உங்களைத் தொடா்புகொள்ள வேண்டும் என்ற எண்ணிக்கை கட்டுக்குள் வைக்கப்படும். வேறொருவரின் பயனா் பெயரைப் பயன்படுத்த திரும்பத் திரும்ப மா்ம நபா் முயற்சித்தால், தானாக அது முடக்கப்பட்டுவிடும்’ என்று தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








