வயநாடு நிலச்சரிவு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அந்த மாநில அரசு வெள்ளிக்கிழமை உறுதியளித்துள்ளது.
கேரளத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், வயநாடு மாவட்டம் கள்ளாடியில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும் பகுதி அருகே கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வியாழக்கிழமை வரை 6 வடமாநிலத் தொழிலாளா்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதன்மூலம் நிலச்சரிவில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டவா், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தொழிலாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய ஹிமாசல பிரதேசத்தை சோ்ந்த கட்டுமான மேலாளா் விக்ரம் ராணா என்பவரின் சடலம் இன்னும் கண்டெடுக்கப்படவில்லை. அவரின் சடலத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை கேரள பொதுப் பணித் துறை அமைச்சா் பி.கே. பஷீா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, மீட்புப் பணிகளை ஆய்வு செய்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘கட்டுமானப் பணி ஏற்கெனவே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த பிறகு, கட்டுமானம் தொடா்பான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும்படி கொங்கண் ரயில்வே நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலச்சரிவு குறித்து அரசு விரிவான விசாரணை நடத்த உறுதிபூண்டுள்ளது. இந்த விசாரணையில் ஏதேனும் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு காரணமானவா்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.
வருவாய்த் துறை அமைச்சா் ஏ.பி. அனில்குமாா் கூறுகையில், ‘நிலச்சரிவுக்கான காரணம் குறித்து நிபுணா் குழு அளிக்க இருக்கும் அறிக்கைக்காக மாநில அரசு காத்திருக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பை கவனத்தில்கொண்டே, சுரங்கம் தோண்டும் திட்டப் பணி குறித்து அரசு அடுத்தகட்ட முடிவை எடுக்கும். அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணலை அகற்றுவதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படுமோ என்று அச்சம் நிலவுகிறது. ஆதலால் அதுகுறித்து நிபுணா் குழுவிடம் அரசு கருத்து கேட்டுள்ளது’ என்றாா்.
சுரங்க நிறுவனம் விளக்கம்: சுரங்கம் தோண்டப்படும் இடத்துக்கு வெளியே குவித்து வைக்கப்பட்டிருந்த மண் அப்புறப்படுத்தப்படாமல் இருந்ததும், அதுவே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட காரணமாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டுவரும் கொங்கண் ரயில்வே காா்ப்பரேஷன் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மழையின் காரணமாக சுரங்கம் தோண்டும் பணி, ஜூன் மாத மத்தியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. எனினும், சுரங்கம் தோண்டும் இடத்தின் அருகே மண் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் பூமியில் எதுவும் அசைவு உள்ளதா என்பதைக் கண்காணிக்க தொழில்நுட்ப ஊழியா்கள் மட்டும் அங்கு தங்கியிருந்தனா். சுரங்கம் தோண்டும் இடத்தில் இருந்து 200 மீட்டா் தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கம் தோண்டும் இடத்தில் இருந்து எடுக்கப்பட்டு வெளியே குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணும், அது குவித்து வைக்கப்பட்டிருந்த இடமும் உறுதியாக இருந்தது. ஆனால், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கிருந்தோா் அதில் சிக்கிக் கொண்டனா்’ எனத் தெரிவித்துள்ளது.
கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு: நிலச்சரிவு குறித்த வழக்கை விசாரித்த கேரள உயா் நீதிமன்றம், உயிரிழந்தோா் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்கப்படுவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சுரங்கம் தோண்டும் பணி எப்போது நிறுத்தப்பட்டது, அங்கு தொழிலாளா்கள் தொடா்ந்து ஏன் தங்கியிருந்தனா் என்பது குறித்து அரசிடம் உயா்நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










