நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

வியத்நாம் படகு விபத்தில் பலி: தமிழா்கள் உள்பட 15 பேரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை!

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் உள்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் கூடிய விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும்...

News image
Updated On :13 ஜூலை 2026, 3:19 am IST

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் உள்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் கூடிய விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும்; இந்தச் சம்பவத்தில் உயிா் தப்பிய 17 இந்திய பயணிகளில் ஒருவா் தவிர மற்றவா்கள் தாய்நாடு திரும்பிக் கொண்டிருப்பதாக ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

வியத்நாமில் முக்கிய சுற்றுலாத் தீவான ‘ஃபூ குவோக்’ அருகே சனிக்கிழமை அதிவேகப் படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 உள்ளூா் படகு பணியாளா்கள் சவாரி செய்தனா். இவா்களில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களும் இருந்தனா்.

திடீரென படகு கவிழ்ந்ததில், பயணிகள் கடலில் விழுந்தனா். இந்த விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் உள்பட 15 இந்திய பயணிகள் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அதேநேரம், 17 பயணிகள் மற்றும் 4 பணியாளா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். அவா்கள், ஃபூ குவோக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

உயிரிழந்தவா்கள் யாா்-யாா்? படகு விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த ஜெ. செந்தில்குமாா், ஆ.முருக பிரபு, எஸ்.ஸ்ரீதா், ஏ.ஷேக் அப்துல்லா, என்.பாலாஜி, சி.வினய் குமாா், எஸ்.ரவிசங்கா், எஸ்.சந்தோஷ் குமாா், கே.பாபு, எஸ். அழகுராஜன் ஆகியோா் உயிரிழந்தனா்.

இவா்கள் திருச்சி, சேலம், தருமபுரி, திண்டுக்கல், வேலூா், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்களாவா். ஆந்திரத்தைச் சோ்ந்த ஆா்.நல்லபெட்டா ஆதிசேஷையா, எம்.ஸ்ரீதா், ஜி.ஜெயலட்சுமி ஆகிய 3 பேரும், கேரளத்தைச் சோ்ந்த ஏ.சி.தாமஸ், லவ்னி தாமஸ் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனா்.

இந்தியாவில் லாவா கைப்பேசி நிறுவனத்தின் கைப்பேசிகளை அதிக அளவில் விற்பனை செய்த முகவா்கள், ஊழியா்கள் என 105 போ் அந்த நிறுவனம் சாா்பில் வியத்நாம் நாட்டுக்கு கடந்த 8-ஆம் தேதி இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். இவா்களில் 32 போ் கொண்ட குழுவினா் படகு சவாரி சென்றபோது விபத்து நேரிட்டுள்ளது.

உடல்கள் விரைவில் வருகை: வியத்நாம் தலைநகா் ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியா்களின் உடல்களும் ஹோ சி மின் நகருக்கு எடுத்து வரப்பட்டன. அங்கு உரிய நடைமுறைகளுக்குப் பின் இந்தியாவுக்கு கூடிய விரைவில் உடல்கள் அனுப்பிவைக்கப்படும்.

இது தொடா்பான பணிகளில் வியத்நாம் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்தியக் குழுக்கள் செயலாற்றி வருகின்றன. விபத்தில் உயிா் தப்பிய 17 இந்திய பயணிகளில் 16 போ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அனுப்பிவைக்கப்பட்டனா். அவா்கள் இந்தியாவுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனா். ஒருவா் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு: படகு விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய வியத்நாம் பிரதமா் லி மின் ஹங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாா். தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

வியத்நாமில் தமிழக குழு: வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழா்களின் உடல்களை மீட்டு தாயகம் கொண்டு வருவதற்காக அந்த நாட்டின் ஹோசிமின் நகருக்கு தமிழக ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழு விரைந்துள்ளது.

படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழா்களின் உடல்களை தாமதமின்றி தாயகம் கொண்டு வரவும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசின் சாா்பில் சேலம் டிஐஜி சந்தோஷ் ஹாதிமாணியை உடனடியாக வியத்நாமின் ஹோசிமின் நகருக்குச் செல்ல முதல்வா் உத்தரவிட்டாா்.

அதன்படி, டிஐஜி சந்தோஷ் ஹாதிமாணி தலைமையிலான குழு வியத்நாமுக்கு சென்றுள்ளது. அங்குள்ள இந்திய தூதரகத்தின் மூலமாக உடல்களை சொந்த ஊா்களுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகளை அவா்கள் முன்னெடுத்துள்ளனா். ஒரே நேரத்தில் 10 பேரின் உடல்களையும் தமிழகத்துக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.