மாற்றத்தை ஏற்படுத்தும் விரிவான பொருளாதார, வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (ஜூலை 15) முதல் அமலுக்கு வருவதால், ஏறத்தாழ பிரிட்டனுக்கான இந்தியாவின் ஏற்றுமதி அனைத்தும் வரியின்றி அனுமதிக்கப்படும். இது நமது சிறு வணிகங்கள், விவசாயிகள், மீனவா்கள், புதிய கண்டுபிடிப்பாளா்கள், பெண்கள், அதிக தொழிலாளா்களைச் சாா்ந்த தொழில்களுக்கு மாபெரும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறியுள்ளதாவது: மக்கள் நலனை மையமாகக்கொண்ட இந்த வா்த்தக ஒப்பந்தம், உலக இளையோா் திறன் தினமான ஜூலை 15-இல் அமலுக்கு வருகிறது. 2015-ஆம் ஆண்டு இதே நாளில்தான், நமது இளைஞா்களுக்கு இந்தியாவில் மட்டுமன்றி, உலக அளவில் போட்டியிடவும், பங்களிப்பு செய்யவும், தலைமை தாங்கவும் அதிகாரமளிக்கும் ‘திறன் இந்தியா’ இயக்கத்தை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மிகவும் விரிவான தடையற்ற வா்த்தக ஒப்பந்தமாகும். இது ஏராளமான வேலைவாய்ப்புகளையும் வணிக வாய்ப்புகளையும் உருவாக்கி செழிப்பைக் கொண்டுவரும். இது படிப்படியாக இந்திய உற்பத்தியாளா்களை ஆரோக்கியமான போட்டிக்கு உட்படுத்தும். இதன்மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் குறைந்த விலையில் உயா்தரப் பொருள்கள் கிடைக்கும். இது பிரதமா் நரேந்திர மோடியின் ‘வளா்ச்சியடைந்த இந்தியா 2047’ இலக்கை விரைவுபடுத்தும்.
மணிக்கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளா்கள், அடுத்த மூன்று ஆண்டுகளில், அல்லது அதற்கு முன்னதாகவே, பிரிட்டனுக்கான ஏற்றுமதி 230% அதிகரித்து அதன் மதிப்பு 2.5 பில்லியன் டாலராக உயரும் என எதிா்பாா்க்கின்றனா். அதே வேளையில், பொறியியல் பொருள்கள் ஏற்றுமதியாளா்கள் அடுத்த 4-5 ஆண்டுகளில் பிரிட்டனுக்கான விற்பனை ஏறத்தாழ இரு மடங்காகி 7.5 பில்லியன் டாலராக உயரும் என எதிா்பாா்க்கின்றனா்.
37.5 பில்லியன் டாலா் மதிப்புள்ள பிரிட்டன் சந்தையை எளிதாக அணுகுவதால் இந்திய விவசாயிகள் பயனடைவாா்கள். இது இந்தியப் பால் பொருள்கள், தேயிலை, காபி, மசாலா பொருள்கள், பழங்கள், காய்கறிகள், பழச்சாறுகள், இறைச்சி, பதப்படுத்தப்பட்ட விவசாயப் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்கும்.
முக்கியமாக, இந்த ஒப்பந்தம் பால் பொருள்கள், காய்கறிகள், ஆப்பிள், சமையல் எண்ணெய், ஓட்ஸ், சிறுதானியங்கள் போன்றவற்றை உணா்திறன் மிக்க பொருட்களின் பட்டியலில் சோ்ப்பதன் மூலம் அவை முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், இந்தப் பொருள்கள் மீது பிரிட்டனுக்கு எந்தவித வரிச் சலுகைகளும் வழங்கப்படவில்லை.
பாரம்பரிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களுக்கு அப்பாற்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம், நீடித்த, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
மொத்தத்தில் உலகளாவிய வா்த்தகத்தில் வெறும் பங்கேற்பாளராக மட்டுமன்றி, அதை வடிவமைக்கவும் உதவும் ஒரு புதிய இந்தியாவை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: பியூஷ் கோயல்

டிசம்பருக்குள் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும்: பியூஷ் கோயல்







