இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து (இஸ்ரோ) குறுகிய காலகட்டத்துக்குள் 120-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வெளியேறியுள்ளதால், விருப்ப ஓய்வு மற்றும் ராஜிநாமா தொடர்பான விதிமுறைகளை மத்திய விண்வெளித் துறை கடுமையாக்கியுள்ளது.
இதில், இஸ்ரோவின் முக்கிய விஞ்ஞானிகளான எல்விஎம் - 3 (LVM-3) திட்ட இயக்குநர், ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்ட இயக்குநர், சந்திரயான் - 3 திட்டத்தின் உருவகப்படுத்துதல் (simulations) பிரிவு மேலாளர் உள்ளிட்டோரும் அடங்குவர்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் மற்றும் பல்வேறு மேம்பட்ட செயற்கைக்கோள் ஏவுதல்கள் போன்ற இந்தியாவின் லட்சியத் திட்டங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், முக்கிய விஞ்ஞானிகள் வெளியேறி வருவது மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஞ்ஞானிகள் வெளியேறுவது ஏன்?
செயற்கைக்கோள் திட்டங்களில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவதற்கும், ஏவுகணைத் தொழில்நுட்பங்களைப் பரிமாற்றம் செய்வதற்கும் மத்திய அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில், அதுபோன்ற தனியார் நிறுவனங்கள், தலைமைப் பொறுப்புக்கு அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளைத் தேடி வருகின்றன.
தற்போது இஸ்ரோவிலிருந்து விருப்ப ஓய்வு அல்லது ராஜிநாமா செய்துவிட்டு வெளியேறும் விஞ்ஞானிகளில் பலர், தனியார் நிறுவனங்களில் இணைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் விஞ்ஞானிகளின் ராஜிநாமா அதிகரித்திருக்கிறது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் எஸ். சோமநாத், சென்னையைச் சேர்ந்த விண்வெளி புத்தாக்க நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸின் இயக்குநர்கள் குழுவின் பார்வையாளராக இணைந்துள்ளதாக அந்நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சகம் சுற்றறிக்கை
இஸ்ரோவிலிருந்து நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் வெளியேறி வரும் நிலையில், மத்திய விண்வெளித்துறையின் இணைச் செயலாளர் (பணியாளர் பிரிவு) எஸ்.ஆர். ராஜசேகர், ஜூலை 14 அன்று, இஸ்ரோவின் அனைத்துப் பிரிவுகளின் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், "அண்மைக்காலமாக, முக்கியத்துவம் வாய்ந்த 'ககன்யான்' மற்றும் பிற முக்கிய விண்வெளித் திட்டங்கள் அல்லது பணிகளுடன் தொடர்புடையவர்கள் உள்பட, இஸ்ரோவின் 'குரூப் ஏ' (Group ‘A’) அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களிடமிருந்து விருப்ப ஓய்வு மற்றும் பணி விலகல் கோரிக்கைகள் பெருமளவில் வருவதாகத் தெரிகிறது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆகையால், இனி ககன்யான் மற்றும் பிற முக்கியமான பணி/திட்டங்களுடன் தொடர்புடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜிநாமா கோரிக்கைகள் வழக்கமான நடைமுறைப்படி ஏற்றுக்கொள்ளப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள்/பொறியாளர்கள்-எஸ்ஜி மற்றும் அதற்கும் குறைவான அறிவியல், தொழில்நுட்ப பணியாளர்களிடம் இருந்து விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகள் பெறப்பட்டால், இறுதி முடிவுக்காக மையங்கள்/பிரிவுகளின் தலைவர்கள் தெளிவான பரிந்துரைகளுடன் மத்திய விண்வெளித் துறைக்கு அனுப்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
120 ISRO scientists resign! Central government in shock! Why? What is happening?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









