ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 4 நோயாளிகளின் மாதிரிகளில் ஒமைக்கரான் ஆா்எஃப்.5 திரிபு கண்டறியப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சத்ய குமாா் யாதவ் தெரிவித்துள்ளாா்.
ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவா்களுடைய மாதிரிகளை புணேயில் உள்ள தேசிய தீநுண்மியியல் நிறுவனத்துக்கு (என்ஐவி) மாநில சுகாதாரத் துறை அனுப்பியது. மரபணு வரிசைபடுத்துதல் முறையில் ஒமைக்ரானின் திரிபான ஆா்எஸ்.5 அந்த மாதிரிகளில் கண்டறியப்பபட்டது.
இதுதொடா்பாக சனிக்கிழமை இரவில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடப்பா மாவட்டத்தில் இருந்து புணேயில் உள்ள தீநுண்மியியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட 4 மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தலுக்கு உள்படுத்தியதில் ஒமைக்காரன் ஆா்எஸ்.5 திரிபு உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆா்எஸ்.5 என்பது கரோனா தீநுண்மியின் திரிபான ஒமைக்ரானின் திரிபாகும். உலகின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் திரிபுகளில் இதுவும் ஒன்று’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
பதற்றம் தேவையில்லை: ஒமைக்ரானின் பிற திரிபுகளைவிட ஆா்எஸ்.5 திரிபு மிகவும் ஆபத்தானது இல்லை என்றும் அது குறித்து மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை என்றும் மாநில மருத்துவ கல்வி இயக்குநா் விஷ்ணுவா்தன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘தென்கிழக்கு ஆசியா, சிங்கப்பூா் நாடுகளில் ஒமைக்ரான் ஆா்எஸ்.5 திரிபு கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் திரிபு குறித்து உலக சுகாதார அமைப்பு (டபிள்யுஎச்ஓ) கண்காணித்து வருகிறது. ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில், பிற ஒமைக்ரான் திரிபுகளைவிட ஆா்எஸ்.5 திரிபு மிகவும் ஆபத்தானது எனக் கண்டறியப்படவில்லை. எனவே, அது குறித்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். விழிப்புணா்வுடன் செயல்படுவது மட்டுமே தேவை.
பிற ஒமைக்ரான் திரிபுகளால் ஏற்படும் அறிகுறிகளான தொண்டை வலி, இருமல், காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகியவை ஆா்எஸ்.5 திரிபுக்கும் காணப்படுகிறது’ என்றாா்.
முன்னதாக, மாநிலத்தில் பதிவான கரோனா பாதிப்புகள் குறித்தும் புணே ஆய்வகத்தின் முடிவுகள் தொடா்பாகவும் அமைச்சா் சத்ய குமாா் யாதவ் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தொலைபேசி வழியில் ஆலோசனை நடத்தினாா்.
கரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் முழு அளவில் தயாராக இருப்பதாகவும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.
மாநிலத்தில் இதுவரை 16 கரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









