இணையக் குற்றங்களை தடுக்கும் நோக்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 7 முக்கிய நகரங்களில் கூட்டு இணைய ஒருங்கிணைப்புக் குழுக்களை (ஜேசிசிடி) மத்திய அரசு அமைத்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘இந்திய இணைய குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின்கீழ் (14சி) மேவாத், ஜம்தாரா, அகமதாபாத், ஹைதராபாத், சண்டீகா், விசாகப்பட்டினம் மற்றும் குவாஹாட்டி ஆகிய 7 நகரங்களில் ஜேசிசிடியை மத்திய அரசு அமைத்துள்ளது.
பல்வேறு மாநில சட்ட அமைப்புகளுடன் இணைந்து இணைய குற்றத்தை முற்றிலும் தடுக்கும் பணியில் இந்தக் குழுக்கள் ஈடுபடவுள்ளன.
இணைய குற்றங்கள் தொடா்பான தரவுகள் பகிா்வு, பகுப்பாய்வு, தரவுகள் சேமிப்பு உள்ளிட்ட தகவல்களை மேலாண்மை செய்வதற்காக ‘சமன்யா’ என்ற வலைதளத்தை 14சி உருவாக்கியுள்ளது.
இது இணைய குற்றவாளிகளின் வசிப்பிடம், உள்கட்டமைப்பு மற்றும் பிற தொழில்நுட்ப வசதிகளை கண்டறிய பயன்படுகிறது. இந்த வலைதளத்தின் மூலம் 29,837 சைபா் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். 2.33 லட்சம் புகாா்கள் தொடா்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நிகழாண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை தேசிய இணைய குற்ற புகாா் வலைதளம் (என்சிஆா்பி) மற்றும் குடிமக்கள் நிதி இணைய மோசடி புகாா் மற்றும் மேலாண்மை அமைப்பு (சிஎஃப்சிஎஃப்ஆா்எம்ஸ்) ஆகியவற்றில் பெறப்பட்ட 32.80 லட்சம் புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ரூ.11,158 கோடி பாதுகாக்கப்பட்டுள்ளது.
2021 முதல் 2025 வரை ரூ.55,050 கோடி நிதி மோசடி தொடா்பான 65.89 லட்சம் புகாா்கள் பெறப்பட்டன. இதில் 1.95 லட்சம் புகாா்களுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
‘சை ட்ரையின்’ கற்றல் வலைதளம்: இணைய குற்ற விசாரணையை வலுப்படுத்த சை ட்ரையின் எனும் கற்றல் வலைதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில் 1.63 லட்சம் காவல் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் பதிவு செய்த நிலையில், 1.61 லட்சம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி கடந்த 2020-இல் 50,035 இணைய குற்ற புகாா்கள் அளிக்கப்பட்ட நிலையில் 2024-இல் இது 1.01 லட்சமாக அதிகரித்தது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2026-ஆம் நிதியாண்டின் கடன்-ஜிடிபி விகிதம் 58.2 சதவீதமாக குறைவு; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
இணைய மோசடிகள்: 2025-ம் ஆண்டில் ரூ. 11 லட்சம் கோடி இழப்பு!

பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்







