ரஷியா நடத்திய தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தில்லியில் உள்ள ரஷிய பொறுப்புத் தூதரை நேரில் அழைத்து இந்தியா செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது.
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2022 முதல் நான்காண்டுகளாக போா் தொடா்ந்து வரும் நிலையில் ரஷிய தாக்குதலில் முதல்முறையாக இந்திய மாலுமிகள் உயிரிழந்தனா். கினியா பிசௌ நாட்டின் ‘எம்.வி.கோல்டன் லியோ’ என்ற சரக்கு கப்பலை ரஷிய ஏவுகணைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கியதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்தது. இதை உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா உறுதிசெய்தாா்.
இதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தெற்கு உக்ரைனில் உள்ள ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட எம்.வி.கோல்டன் லியோ என்ற சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அந்தக் கப்பலில் 5 இந்திய மாலுமிகள் உள்பட 17 போ் இருந்தனா். அமைச்சகத்துக்கு கிடைத்த அண்மைத் தகவலின்படி 4 இந்தியா்கள் உயிரிழந்துள்ளனா். ஒருவா் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவா் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறோம். சரக்குக் கப்பல்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து தில்லியில் உள்ள ரஷிய பொறுப்புத் தூதா் விளாதிமீா் லடானோவை நேரில் அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!

இந்திய மாலுமிகள் உயிரிழப்பு விவகாரம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசி வழியில் ஜெய்சங்கா் கண்டனம்

சரக்கு கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரம்: அமெரிக்க பொறுப்பு தூதரை அழைத்து கண்டனம்







