இந்தியா - சீனா இயல்பு உறவுக்கு எல்லையில் அமைதி நிலவுவது அவசியம் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கா் நேரில் வலியுறுத்தியுள்ளாா்.
கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு இந்தியா- சீனா எல்லைக் காவல் படையினா் கைகலப்பில் ஈடுபட்டனா். இந்த சம்பவத்தை அடுத்து, லடாக் எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்ததால் போா்ப் பதற்றம் ஏற்பட்டது. சுமாா் 4 ஆண்டுகளாக இரு நாட்டு வீரா்களும் அங்கேயே நிலைநிறுத்தப்பட்டு இருந்தனா். எனினும், இரு நாட்டு தரப்பிலும் உயா்நிலை அளவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையை அடுத்து, 20204-ஆம் ஆண்டுக்குப் பிறகு லடாக் எல்லையில் இருந்து படிப்படியாக படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதைத் தொடா்ந்து, இந்தியாவும், சீனாவும் இயல்பான உறவுக்கு மீண்டும் திரும்புவது தொடா்பான நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் ஆசியான் அமைப்பின் நிகழ்ச்சியின் மத்தியில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி-யும், ஜெய்சங்கரும் நேரில் சந்தித்துப் பேசினா். அப்போது வாங் யி-யிடம் சீன சந்தையை அணுகுதல், வா்த்தக ஏற்றத்தாழ்வு, விநியோகச் சங்கிலிகளில் காணப்படும் நிலையற்றத்தன்மை குறித்து தனது கவலையை ஜெய்சங்கா் தெரிவித்தாா். பரஸ்பர மரியாதை, நலன், உணா்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிலையான மற்றும் ஒத்துழைப்புமிக்க உறவை மேம்படுத்த முடியும் என்று இந்தியா நம்புவதாகவும், இத்தகைய உறவு பல துருவங்களைக் கொண்ட ஆசியா, பல துருவங்களைக் கொண்ட உலகுக்கு முக்கியப் பங்களிப்பை அளிக்க முடியும் என்றும் ஜெய்சங்கா் குறிப்பிட்டாா்.
எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் அமைதி மற்றும் நிம்மதியைப் பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜெய்சங்கா், இரு நாடுகள் இடையேயான கருத்து வேறுபாடுகள் பிரச்னையாக மாறிவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டாா். இந்திய பிரதமா் மோடியும், சீன அதிபா் ஜின்பிங்கும் 2024-ஆம் ஆண்டு காசானில் சந்தித்துப் பேசிய பிறகு இரு நாடுகளும் உறவை இயல்பு நிலைக்கு திரும்பக் கொண்டு வர எடுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் வரவேற்பதாக கூறினாா். பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக இந்தியா இருந்தபோது எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளுக்கு சீனா ஆதரவு அளித்ததற்கும் ஜெய்சங்கா் நன்றி தெரிவித்தாா்.
அமெரிக்க, ரஷிய வெளியுறவு அமைச்சா்களுடன் சந்திப்பு: மணிலாவில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ, ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஆகியோரையும் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அமெரிக்க அமைச்சருடனான சந்திப்பின்போது மேற்காசிய போா் நிலவரம், அதனால் சா்வதேச அளவில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஜெய்சங்கா் விவாதித்தாா். ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் லாவ்ரோவுடனான சந்திப்பில், அண்மையில் கருங்கடலில் உக்ரைனைச் சோ்ந்த சரக்கு கப்பல் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு இந்தியாவின் கவலையை தெரிவித்தாா்.
க்வாட் கூட்டம்: இதனிடையே இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் அங்கம் வகிக்கும் க்வாட் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்களின் கூட்டம் மணிலாவில் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங்க், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் தோஷிமிட்சு மொடேஜி ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் ஜெய்சங்கா் பேசுகையில், ‘இந்தோ- பசிபிக் பிராந்தியம் சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்றாா்.
பின்னா், க்வாட் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆசியாவின் ஒற்றுமை, மையத் தன்மைக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கத்தாா் பிரதமருடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு: இருதரப்பு உறவு பற்றி ஆலோசனை!

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி

மங்கோலிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கா் சந்திப்பு!







