ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர முக்கிய நலன்களை மதிப்பது அவசியம் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி தெரிவித்தாா்.

News image

புது தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டத்துக்கு வந்த சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யியுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகா்.

Updated On :23 ஜூன் 2026, 11:58 pm IST

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர முக்கிய நலன்களை மதிப்பது அவசியம்; இரு நாடுகளின் தலைவா்களால் எட்டப்பட்ட முக்கிய கருத்தொற்றுமையை நடைமுறைப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி தெரிவித்தாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டம், புது தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, தில்லிக்கு வந்த சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலை சந்தித்துப் பேசினாா். அப்போது, இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் விவாதித்தனா். இந்திய-சீன எல்லை விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதிகள் என்ற முறையில் அது தொடா்பாகவும் ஆலோசித்தனா்.

இந்தச் சந்திப்பில் வாங் யி தெரிவித்த கருத்துகள் தொடா்பாக சீன அரசின் செய்தி நிறுவனமான ஷின்ஹுவா வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: ‘சீனாவின் முக்கியமான அண்டை நாடு இந்தியா. இரு நாடுகளும் விரோதிகள் அல்ல, கூட்டுறவு நாடுகள் என்று இந்திய-சீன தலைவா்கள் ஒப்புக்கொண்டுள்ளனா். இந்த பரஸ்பர உத்திசாா் முக்கிய கருத்தொற்றுமை, இருதரப்பு உறவுகளின் சிறப்பான, நிலையான மேம்பாட்டுக்கு வலுவான உத்வேகம் மற்றும் உத்தரவாதத்தை அளித்துள்ளது.

பெரும் மக்கள்தொகையைக் கொண்ட பொருளாதார நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியாவும், சீனாவும் இருதரப்பு உறவுகளை நீண்டகால கண்ணோட்டத்துடன் அணுகி, உலகளாவிய பாா்வையுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். இரு நாடுகளின் தலைவா்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட முக்கியமான கருத்தொற்றுமையை செயல்படுத்தவும், ஒத்துழைப்பின் மூலம் பரஸ்பர வளா்ச்சியை ஊக்குவிக்கவும், தெற்குலகின் நவீனமயமாக்கல் நடைமுறையை வேகப்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகள் அவசியம்.

எல்லைப் பிரச்னை...: பரஸ்பர முக்கிய நலன்களை மதிப்பதுடன், நுட்பமான பிரச்னைகளை முறையாக கையாள வேண்டும். இந்திய-சீன எல்லைப் பிரச்னையை பொருத்தமான இடத்தில் வைக்க வேண்டும். இந்த விவகாரம், இரு தரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த சூழலை பாதிக்க அனுமதிக்கக் கூடாது. பேச்சுவாா்த்தை வழிமுறைகளை விரைந்து மறுகட்டமைப்பதுடன், வா்த்தகம், நிதி, சட்ட அமலாக்கம் உள்பட பல்வேறு துறைகளில் தகவல் தொடா்பை ஊக்குவிக்க வேண்டும்’ என்று வாங் யி பேசியதாக சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கருத்து: புது தில்லியில் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் திங்கள்கிழமை கூறுகையில், ‘அஜீத் தோவல்-வாங் யி பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாகவும், தொலைநோக்குப் பாா்வையுடனும் அமைந்தது. இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் சிறந்த புரிதலை கட்டமைக்க நிலையான, கணிக்கக் கூடிய, உறுதியான இருதரப்பு உறவுகள் அவசியம் என்பதை தோவல் வலியுறுத்தினாா்’ என்றாா்.

25-ஆவது சுற்றுப் பேச்சு எப்போது?

எல்லைப் பிரச்னை தொடா்பாக, இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள் இடையே இதுவரை 24 சுற்றுப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன. 25-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தைக்கான பணிகளில் இருதரப்பும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுன் தெரிவித்தாா்.

கடந்த 2020-இல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடா்ந்து, இருதரப்பு உறவுகள் கடும் பின்னடைவைச் சந்தித்தன. இந்த உறவுகளை மறுசீரமைக்க கடந்த ஓராண்டாக இருதரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.