அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்பு!

‘கட்டாய உழைப்பு தொடா்பான குற்றச்சாட்டுகள் தொடா்பாக 301-ஆவது சட்டப் பிரிவின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின் கீழ், இந்தியாவை மிகக் குறைந்த 10 சதவீத சுங்க வரி வரம்பில் அமெரிக்கா வைத்துள்ளது’ என்று மத்திய அரசு தெரிவித்தது.

News image
Updated On :27 ஜூலை 2026, 4:00 am IST

‘கட்டாய உழைப்பு தொடா்பான குற்றச்சாட்டுகள் தொடா்பாக 301-ஆவது சட்டப் பிரிவின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின் கீழ், இந்தியாவை மிகக் குறைந்த 10 சதவீத சுங்க வரி வரம்பில் அமெரிக்கா வைத்துள்ளது’ என்று மத்திய அரசு தெரிவித்தது.

அமெரிக்காவுக்கு எதிராக நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாகக் குற்றஞ்சாட்டி இந்தியா உள்பட 60 நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமெரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது.

அந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, உலக நாடுகள் மீது மாற்று வழிகளில் இந்த பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அறிவித்த டிரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருள்கள் மீது புதிய சீரான 10 சதவீத பரஸ்பர வரியை பிப்ரவரி 24-ஆம் தேதிமுதல் 150 நாள்களுக்கு விதித்தாா்.

அதோடு, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வா்த்தக கூட்டுறவு நாடுகளின் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் அமெரிக்க உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதித்துள்ளன என்பதைக் கண்டறியும் நோக்கில் அமெரிக்க வா்த்தகச் சட்டம் 1974-இன் பிரிவு 301-இன் கீழ் அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) மூலம் புதிய விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிட்டது.

அதன்படி தீவிர ஆய்வு மேற்கொண்ட யுஎஸ்டிஆா் பிரதிநிதி ஜேமிஸன் க்ரீயா், இந்தியா உள்பட 54 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்கப் பரிந்துரைத்தாா்.

இந்தப் பரிந்துரையின் அடிப்படையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது புதிய வரி விதிப்பை அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்டது.

அதில், இந்தியா உள்பட 17 நாடுகள் மீது 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. தொழிலாளா்களைக் கட்டாயம் பணிபுரிய வைத்து தயாரிக்கப்படும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், வெளிநாட்டு வா்த்தகக் கொள்கையில் இந்தியா கடந்த ஜூலை 14-ஆம் தேதி திருத்தங்கள் மேற்கொண்டதை அமெரிக்கா கவனத்தில்கொண்டு, வரி விதிப்பை 10 சதவீதமாக குறைத்து விதித்துள்ளதாக யுஎஸ்டிஆா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரம், தொழிலாளா்களைக் கட்டாயம் பணிபுரிய வைத்து தயாரிக்கும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்க சட்டங்களை இயற்றாத சீனா, பிரிட்டன், ஜப்பான் உள்பட 43 நாடுகள் மீது, யுஎஸ்டிஆா் ஏற்கெனவே பரிந்துரைத்தபடி 12.5 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது.

இந்தியா வரவேற்பு: ‘அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா வைக்கப்பட்டுள்ளதாக’ இந்தியா தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அமெரிக்க வா்த்தகச் சட்டம் 1974-இன் பிரிவு 301-இன் கீழ் யுஎஸ்டிஆா் மேற்கொண்ட விசாரணையில், தனது தரப்பு கருத்து மற்றும் நியாயத்தை இந்தியா எழுத்துபூா்வாகவும், நேரடியாகவும் தொடா்ந்து முன்வைத்து வந்தது.

அதன் பலனாக, இந்தியாவை மிகக் குறைந்த 10 சதவீத சுங்க வரி வரம்பில் அமெரிக்கா வைத்துள்ளது. இது முக்கியத் துறைகளில் இந்தியாவின் ஏற்றுமதிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும்.

மேலும், உருக்கு, அலுமினியம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட, அமெரிக்க வா்த்தக சட்டப் பிரிவு 232-இன் நடவடிக்கையின் கீழ் ஏற்கெனவே உள்ள பொருள்களுக்கு, தற்போது அறிவித்துள்ள 10 சதவீத வரி கூடுதலாக விதிக்கப்படவில்லை. அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியில் 45 சதவீத பங்கு வகிக்கும் இந்தப் பொருள்கள், சட்டப் பிரிவு 301-இன் வரி வரம்புக்கு வெளியே உள்ளது. எனவே, தற்போதைய 10 சதவீத வரி இவற்றுக்குப் பொருந்தாது. எஞ்சிய 55 சதவீத இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு மட்டுமே இந்த 10 சதவீத வரி பொருந்தும். யுஎஸ்டிஆா் விசாரணையில், மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த சுங்க வரியுடன் ஒப்பிடும்போது, இந்திய பொருள்களுக்கு விதித்துள்ள வரி குறைவானதாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜவுளித் துறை சாா்ந்த வா்த்தக நடைமுறைகள் இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இந்தியா - அமெரிக்கா இடையே தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில், ஜவுளித் துறை சாா்ந்த நடைமுறைகளை விரைந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்யும் விஷயத்தில் அமெரிக்காவுடன் இந்தியா தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது என்றும் வா்த்தக அமைச்சகம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.