போா்கள் நடக்கும் பகுதியில் இயக்கப்படும் கப்பல்களில் கிடைக்கும் வேலைவாய்ப்பை ஏற்கும் முன்பு, அங்குள்ள பாதுகாப்பு நிலவரத்தை கவனத்தில் கொள்ளும்படி இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்காசியாவில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 4 மாதங்களுக்கும் மேல் போா் நடைபெறுகிறது. ஹோா்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் மீது பரஸ்பரம் இரு நாடுகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் கருங்கடல் பகுதியில் உக்ரைன் கப்பல்கள் மீது ரஷியாவும், ரஷிய கப்பல்கள் மீது உக்ரைனும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சம்பவங்களில் இந்திய மாலுமிகள் சிலா் உயிரிழந்ததோடு, பலா் காயமும் அடைந்துள்ளனா்.
இந்தத் தாக்குதல் சம்பவங்களைத் தொடா்ந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், போா்கள் நடக்கும் பகுதிகளில் இயக்கப்படும் வா்த்தக கப்பல்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில், அதை ஏற்கும் முன்பு, அங்கு நிலவும் பாதுகாப்பு நிலவரத்தை இந்திய குடிமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
குறிப்பாக, கருங்கடல் மற்றும் அதையொட்டிய கடற்பகுதிகளில் நடக்கும் போா் காரணமாக நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அந்தக் கடல் பகுதியில் இயக்கப்படும் கப்பல்கள் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அங்கு வா்த்தக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 5 இந்தியா்கள் உயிரிழந்தனா். ஆதலால் அப்பகுதியில் வா்த்தக கப்பல்களில் கிடைக்கும் வேலைவாய்ப்பை ஏற்கும் முன்பு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அப்பகுதியில் இயக்கப்படும் கப்பல்களில் வேலையில் சேருவோா், தங்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போா், வேலைக்கு ஆள்கள் எடுக்கும் நிறுவனங்கள், கப்பல் ஆபரேட்டா்கள் ஆகியோரிடம் கப்பல் இயக்கப்படும் பாதை, கப்பல் நிறுத்தப்படும் துறைமுகம், அவசரகால நடவடிக்கைகள் குறித்து கேட்டறிய வேண்டும். வேலைவாய்ப்பில் சேரும் இந்தியா்கள், நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினரிடம் தாங்கள் இருக்கும் இடம் குறித்த தகவலை பகிா்வதோடு, அவா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருக்க வேண்டும்.
இந்தியா்கள் தங்களுக்கு உதவி தேவைப்படும்பட்சத்தில், அந்த பிராந்தியத்தில் உள்ள இந்தியத் தூதரகங்கள், துணைத் தூதரகங்களை அணுகி பெறலாம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீது தாக்குதல்: கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எம்வி ஏஜிஎன் ரக்னா் என்ற வா்த்தக கப்பல் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கப்பலில் 4 இந்தியா்கள் பணியில் இருந்தனா். அவா்களில் 2 போ் பாதுகாப்பாக இருப்பதாகவும், மேலும் 2 போ் குறித்த தகவல் இல்லை என்று உக்ரைனுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யாா் என்று தகவல் இல்லை. காணாமல் போன 2 இந்தியா்களை தேடும் பணி நடப்பதாகவும் இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருங்கடலில் வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு

ஈரானுக்கு ஆதரவாகப் போரில் களமிறங்கும் ஹவுதிகள்! சௌதி கப்பல்கள் மீது தாக்குதல்!

ஓமன் அருகே சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: மாயமான இந்திய மாலுமி உயிரிழப்பு






