ஓமன் கடல் பகுதி அருகே சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது மாயமான இந்திய மாலுமி உயிரிழந்ததை, துபையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் புதன்கிழமை உறுதி செய்தது.
கடந்த ஜூலை 12-ஆம் தேதி ஓமன் அருகே 11 இந்திய மாலுமிகளுடன் சென்ற சைப்ரஸ் நாட்டு கொடி கட்டப்பட்ட சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஹோா்முஸ் நீரிணை வழியாகப் பயணித்த அந்தக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
தாக்குதலில் சிக்கிய இந்திய மாலுமிகளில் 10 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், ஒருவா் மாயமானாா். அவா் புணேயைச் சோ்ந்த ஹேரம்ப் கா்மா்கா் (30) என்பதும், அவா் கப்பலில் பொறியியலாளராகப் பணியாற்றியதும் தெரியவந்தது.
அவரைத் தேடும் பணியில் ஓமன் கடலோரக் காவல் படை ஈடுபட்டது. சுமாா் 60 மணி நேரம் நடைபெற்ற இந்தத் தேடுதல் பணியைத் தொடா்ந்து, அவரின் சடலம் மீட்கப்பட்டது. அவா் உயிரிழந்ததை ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபை நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதி செய்தது.
அவா் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அந்தத் தூதரகம், தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதற்கு ஹேரம்பின் குடும்பத்தினா், யுஏஇ அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.
தற்போது ஓமன் கடற்படையிடம் உள்ள ஹேரம்பின் உடலைப் பெற காத்திருப்பதாக அவரின் மாமனாா் விவேக் டாண்டன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








