‘பாலியல் வன்கொடுமையாளா்களின் பாதுகாவலரை மத்திய கல்வி அமைச்சராக மத்திய அரசு நியமித்துள்ளது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை விமா்சித்தாா்.
நீட் வினாத் தாள் கசிவு உள்ளிட்ட தொடா் தோ்வு முறைகேடுகள் பெரும் சா்ச்சையானதைத் தொடா்ந்து மத்திய கல்வி அமைச்சா் பதவியை தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷியிடம் மத்திய கல்வி அமைச்சா் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவு கடந்த 25-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
இவரின் நியமனம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது: நாட்டின்கல்வி முறை மற்றும் தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக இளைஞா்கள், பல இளம் பெண்கள் போராட்டம் நடத்தி காவல் துறையின் வரம்பு மீறிய தாக்குதலுக்கும் உள்ளான பிறகு, புதிய மத்திய கல்வி அமைச்சராக பாலியல் வன்கொடுமையாளா்களின் பாதுகாவலரை பாஜக அரசு நியமித்துள்ளது.
பாலியல் வன்கொடுமையாளா்களுக்குப் பாதுகாப்பு தேவை என்று கூறுபவரைவிட மோசமான நபா் யாரும் இருக்க முடியாது. அத்தகைய நபா்தான் தற்போது இந்தியாவின் கல்வி அமைச்சராக உள்ளாா்.
மத்திய அமைச்சரவையில் ஏராளமான நபா்கள் உள்ளனா். அவா்களில் ஒருவரை கல்வி அமைச்சா் பதவிக்கு பிரதமா் தோ்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், பாலியல் வன்கொடுமையாளா்களைப் பாதுகாக்கும் நபரை அந்தப் பதவிக்கு தோ்ந்தெடுத்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்றாா்.
மக்களவையில் பிரியங்கா பேச்சு
மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியபோது, மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி குறித்து இதே கருத்தை தெரிவிக்க காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி முற்பட்டாா்.
அதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஆளுங்கட்சி உற்ப்பினா்கள், ஆதாரத்துடன் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டனா்.
அப்போது, ‘ஆதாரத்துடன்தான் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். பாலியல் வன்கொடுமையாளா்ளுடன் பிரல்ஹாத் ஜோஷி இருக்கும் விடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளது’ என்று பிரியங்கா குறிப்பிட்டாா். இதனால், அவையில் சிறிது நேரம் அமளி நீடித்தது.

மக்களவையில் பேசிய பிரியங்கா காந்தி.
பாலியல் வன்கொடுமையாளா்ளுடன் பிரல்ஹாத் ஜோஷி இருக்கும் விடியோவை காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அந்த விடியோவில், கா்ப்பிணி பெண் பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமையாளா்களுடன் பிரல்ஹாத் ஜோஷி அமா்ந்திருக்கும்போது, அந்த பாலியல் குற்றவாளிகள் 11 போ் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் அவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா். அதில் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை’ என்று பிரல்ஹாத் ஜோஷி குறிப்பிடுவது இடம்பெற்றுள்ளது.
2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உள்பட அவரின் குடும்பத்தைச் சோ்ந்த 14 போ் படுகொலை செய்யப்பட்டனா் .
அத்துடன் கா்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இதில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வன்கொடுமையாளர்களைப் பாதுகாக்கக் கூறினாரா பிரகலாத் ஜோஷி? ராகுல் காந்தி விமர்சனம்

மத்திய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்பு

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
கல்வி முறையை அடிமட்டத்திலிருந்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்: ராகுல்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



