பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடா்புடைய நபா் மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப் படையினா் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் ஹுஸைஃபா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். கராச்சியில் இருந்து செயல்படுவதாக நம்பப்படும் மும்பை குற்ற உலகின் முக்கிய நபரான முன்னா ஜிங்கடாவுடன் இணைந்து இவா் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நாட்டில் அச்சம் மற்றும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் செயல்பட அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய அமைப்புகள் மற்றும் தில்லி சிறப்பு பிரிவு காவல் துறையினா் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இவா் கைது செய்யப்பட்டாா். சமீபத்தில் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மும்பையில் பல இடங்களில் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நபா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட உள்ளாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.







