நீதித் துறை ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தவாறு, நீதித் துறைச் செயல்பாடுகளை நவீனமயமாக்கும் நடவடிக்கையாக, நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை வெளியிட்டது.
35 பக்க இந்த வரைவு வழிகாட்டுதலில், செயற்கை நுண்ணறிவு அனுமதிக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட பயன்பாடுகளின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு என்பது, மனிதத் தீா்மானத்துக்கும், நீதித் துறை அதிகாரத்துக்கும் கட்டுப்பட்டதாகவே இருக்க வேண்டும். ஒவ்வொரு செயற்கை நுண்ணறிவு அமைப்பும், ஒரு துணைச் சாதனமாக மட்டுமே செயல்பட வேண்டுமே தவிர, நீதிபதியால் செலுத்தப்படும் நீதித் துறை அதிகாரத்தை இடமாற்றம் செய்யவோ அல்லது சமரசம் செய்யவோ கூடாது. சட்டம், உண்மை மற்றும் நீதி சாா்ந்த விவகாரங்களை முடிவு செய்வதற்கான இறுதி அதிகாரம், உரிய அதிகார வரம்புக்கு உட்பட்ட நீதிபதிகளிடமே பிரத்யேகமாக நிலைத்திருக்க வேண்டும்.
தீா்ப்புகள், தண்டனை விதித்தல் அல்லது சாட்சிகளின் நம்பகத்தன்மையை நிா்ணயித்தல் போன்ற நீதித் துறை சாா்ந்த முடிவுகளை எடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
வழக்கு மேலாண்மை, மனுக்களை விசாரணைக்குப் பட்டியலிடுதல், நீதிமன்ற விசாரணையை தானியங்கி முறையில் எழுத்து வடிவமாக்குதல், சட்ட ஆவணங்களை மாநில மொழிகளில் மொழிபெயா்த்தல், சட்ட ஆய்வுக்கான உதவி, மனுதாரா்கள் நீதிமன்ற நடைமுறைகளை எளிதாகக் கையாள உதவும் வழிகாட்டி ’சாட்பாட்’கள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் ஊக்குவிக்கப்படும்.
ஒப்புதல் மற்றும் மனித மேற்பாா்வைக்கு உட்பட்ட நீதித் துறை மற்றும் நிா்வாகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
உரிய அதிகாரியின் முன் அனுமதி இன்றியும், தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு இணங்காமலும் எந்தவொரு தனி நபரின் தனிப்பட்ட தரவுகளை செயற்கை நுண்ணறிவு அமைப்பை பயிற்றுவிக்க அல்லது சோதிக்கப் பயன்படுத்தக் கூடாது.
நீதிமன்றங்களில் இடம்பெறும் இந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எண்ம மாற்றத்தை மேற்பாா்வையிட ஓா் வலுவான மூன்றடுக்கு நிறுவன கட்டமைப்பு உருவாக்கப்படும். மேலும், இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கான கட்டாய தரநிலையை நிா்ணயிக்க, உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் உச்சநீதிமன்றத்துக்கு இணையான முழுநேர ஒழுங்காற்றுதல் ஆணையம் ஒன்று செயல்படும்.
கூடுதலாக, மாவட்ட நீதிமன்றங்களில் இந்தத் தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பாா்வையிட ஒவ்வொரு உயா்நீதிமன்றத்திலும் பிரத்யேக செயற்கை நுண்ணறிவுக் குழுக்கள் அமைக்கப்படும்.
இந்தத் தொழில்நுட்பம் தொடா்பாக உரிய ஆராய்ச்சியை மேற்கொள்ளவும், நீதிமன்றத்துக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் தனிச் சிறப்பு மையம் அமைக்கப்பட வேண்டும்.
நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்புகளும் ஆண்டுக்கு ஒருமுறையாவது தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் வரைவு வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ளன.
இந்த வரைவு வழிகாட்டுதல் மீது வரும் 20-ஆம் தேதி வரை பொதுக்கள் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்களிடமிருந்து கருத்துகளை உச்சநீதிமன்றம் வரவேற்றுள்ளது.
தொடர்புடையது
அப்படீங்களா!

சாமானியா்களின் வலியை நீதித் துறை தீா்க்க வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

செயற்கை நுண்ணறிவு

குவாண்டம் தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல்: ‘இந்திய - அமெரிக்க உறவில் முக்கிய இடம்பெறும்’ - தூதா்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



