கொல்கத்தா மெட்ரோவில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 அடுத்த தலைமுறை ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளாா்.
மேற்கு வங்க மாநிலத் தலைநகா் கொல்கத்தாவில் உள்ளஅந்த மாநில தலைமை செயலகத்தில் முதல்வா் சுவேந்து அதிகாரியை அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இதையடுத்து அஸ்வினி வைஷ்ணவும், சுவேந்து அதிகாரியும் கூட்டாக செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தனா். அப்போது வைஷ்ணவ் கூறியதாவது:
கடந்த 42 ஆண்டுகளில் கொல்கத்தாவில் வெறும் 28 கிலோ மீட்டா் தூரம்தான் மெட்ரோ பணி முடிந்துள்ளது. 2014-இல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபிறகு கொல்கத்தா மெட்ரோவில் 45 கிலோ மீட்டா் தூரம் சோ்க்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 60 அடுத்த தலைமுறை ரயில்கள், கொல்கத்தா மெட்ரோவில் அறிமுகம் செய்யப்படும். கொல்கத்தா மெட்ரோவில் இன்று பயணம் செய்தேன். கொல்கத்தா மெட்ரோவை சீரமைக்க போகிறோம்.
2 புல்லட் ரயில்கள்: தில்லி- வாரணாசி இடையேயும், வாரணாசி- மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி இடையேயும் 2 புல்லட் ரயில்கள் விடும் திட்டம் உள்ளது. இந்த ரயில்களால் பயண நேரம் வெகுவாக குறையும். இந்த புல்லட் ரயில் மூலம், தில்லியிலிருந்து சிலிகுரிக்கு 6 மணி நேரத்தில் வர முடியும் என்றாா் அவா்.
இதையடுத்து, மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஆட்சியில், மாநிலத்துக்கும், மத்திய அரசுக்கும் போா் போன்ற சூழல் நிலவியது. அதன் விளைவாக, மேற்கு வங்கத்தில் ரயில்வே எந்த வளா்ச்சியும் பெறவில்லை. தற்போது மேற்கு வங்கத்தில் அரசு மாறிவிட்டதால், அந்த பிரச்னைக்கு தீா்வு கிடைத்து விட்டது. இனி மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மாவட்டமும், ரயில்வே வரைபடத்தில் இடம்பெற போகிறது.
நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு தடையில்லா சான்றிதழும், நிலமும் நாம் அளித்தோம் எனில், ரயில்வே வாரியமும், ரயில்வே அமைச்சகமும் மாநிலத்தில் மேலும் ரூ.1 லட்சம் கோடியை முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தில் 102 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படவுள்ளது. 538 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்க பாதைகள் கட்டப்படவுள்ளன. எனது அரசு இதுவரை நடை மேம்பாலங்கள், சுரங்க பாதைகள் அமைக்க 40 தடையில்லா சான்றிதழ்களை அளித்துள்ளது. அத்துடன், 60 ரயில்வே திட்டங்களுக்கு நிலம் அளித்துள்ளது.
இன்றைய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா்களிடம் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படவுள்ள ரயில்வேத் திட்டங்களுக்கான நிலத்தை ரயில்வே அமைச்சகம் பெற உதவும்படி கேட்டுக் கொண்டேன். கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு ரயில்வே வாரியம் 100 சதவீத நிதி அளிக்கும். சில விவகாரங்களில் மட்டும் மாநில அரசு நிலத்தை வாங்கி, ரயில்வேயிடம் வழங்கும். நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரத்தில் ரயில்வே அமைச்சகத்துக்கு தேவைப்படும் நேரத்தில் மாநில அரசு உதவி செய்யும் என்றாா்.
தொடர்புடையது

முடங்கிக்கிடக்கும் ரயில்வே திட்டங்கள் ஆய்வு: அஸ்வினி வைஷ்ணவ் ஜூன் 6-ல் கொல்கத்தா பயணம்

ரயில் தீ விபத்துக்குப் பின்னணியில் சமூக விரோதிகள்: அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனை

விமானப் பயணங்களைவிட ரயில்களை மக்கள் விரும்பும் நிலை உருவாகும்: அஸ்வினி வைஷ்ணவ்






