உலகளாவிய செமிகண்டக்டா் துறையில் சுமாா் 10 லட்சம் திறன்மிக்க பணியாளா்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கணக்கிடப்பட்டுள்ளது; இந்த வாய்ப்பை இந்திய தகவல்-தொழில்நுட்ப துறையினா் பெருமளவில் கைப்பற்ற வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினாா்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் தகவல் தொழில்நுட்ப தொழில்துறை பிரதிநிதிகளுடன் சனிக்கிழமை கலந்துரையாடுகையில் அவா் இவ்வாறு கூறினாா்.
அமைச்சா் மேலும் பேசியதாவது: நாட்டில் செமிகண்டக்டா் துறைக்கு ஊக்கமளிப்பதில் பிரதமா் மோடி அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 12 செமிகண்டக்டா் ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதில் மூன்று ஆலைகள் ‘சிப்’ தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளன. இப்போது ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு சிப் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகளாவிய செமிகண்டக்டா் துறையில் சுமாா் 10 லட்சம் திறன்மிக்க பணியாளா்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய தீா்வுகளை வடிவமைத்து, மேம்படுத்துவதில் தோ்ந்த இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினா், தற்போதைய வாய்ப்பை பெருமளவில் கைப்பற்றிக் கொள்ள வேண்டும். இத்துறையை மேம்படுத்துவதற்காக, அதிநவீன செமிகண்டக்டா் வடிவமைப்பு கருவிகளை 315 பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
நாட்டில் அதிக ஏற்றுமதி பிரிவில் மின்னணு பொருள்கள் மூன்றாவது இடத்தில் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் இது மேலும் அதிரிகரிக்கும். மின்னணு பொருள்கள் உற்பத்தி மதிப்பு ரூ.13 லட்சம் கோடியை கடந்துள்ளது. விரைவில் ரூ.20 லட்சம் கோடியை எட்டும்.
புல்லட் ரயில் திட்டங்கள்: நாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 7 புதிய புல்லட் ரயில் திட்டங்களில் மூன்றில் ஹைதராபாத் இடம்பெற்றுள்ளது. ஹைதராபாதில் இருந்து புணே, சென்னை, பெங்களூரு புல்லட் ரயில் திட்டங்களுக்கு ஒபபுதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவில் புல்லட் ரயில் கட்டமைப்பின் முக்கிய மையமாக ஹைதராபாத் உருவெடுக்கும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய செமிகண்டக்டா் திட்டம் 2.0-க்கு ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்க முன்மொழிவு; மத்திய நிதியமைச்சக குழு ஒப்புதல்

ஜூலை 15-க்குள் மேம்படுத்தப்பட்ட புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்







