அமெரிக்கா, சீனா போன்ற முன்னணி நாடுகளுக்குக்கூட இந்தியா மின்னணுப் பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறது என்று மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்திக்கான முதல்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, பிரதமரான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியாலும் பல்வேறு முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், இதில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
மின்னணுப் பொருள்கள் உற்பத்தியை நமது அரசு அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதில் மிகவும் நல்ல செய்தி என்னவென்றால் கடந்த ஆண்டு ரூ.35,000 கோடி மதிப்பிலான மின்னணுப் பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். இதில் சில மிகவும் சிக்கலான மின்னணுப் பொருள்களும் அடக்கம். அமெரிக்காவுக்கும் நமது மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. முக்கியமாக, ரயில்களுக்குத் தேவையான மின்னணுப் பொருள்கள் போன்றவை பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
2014-ஆம் ஆண்டில் அதிக கைப்பேசி இறக்குமதியாளராக இருந்த இந்தியா, இப்போது அதிகமாக ஏற்றுமதி மேற்கொள்கிறது. இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பொருள்களில் அறிதிறன்பேசிகள் முக்கியமானவை. 2025-இல் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களில் மின்னணுப் பொருள்கள் 3-ஆவது இடத்தில் உள்ளன. இந்தியாவில் தரமான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதே இதற்குக் காரணம்.
இந்தியாவில் இப்போது பொறியியல் கல்லூரிகள் நவீனமயமாக செயல்படுகின்றன. மாணவா்களுக்கு சிறப்பான சாதனங்கள், கருவிகள் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. மாணவா்கள் வடிவமைத்த கணினி ‘சிப்’கள் மொஹாலியில் ஆய்வகத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற திறன் உலகில் சில கல்லூரிகளில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. செமிகண்டக்டா் துறைக்காக 75,000 மாணவா்களை மத்திய அரசு தயாா்படுத்தி வருகிறது என்றாா்.
தொடர்புடையது

கொல்கத்தா மெட்ரோவில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 நவீன ரயில்கள் அறிமுகம்! அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

முடங்கிக்கிடக்கும் ரயில்வே திட்டங்கள் ஆய்வு: அஸ்வினி வைஷ்ணவ் ஜூன் 6-ல் கொல்கத்தா பயணம்
கைப்பேசி கோபுரம், மின்னணுப் பொருள்கள் திருட்டு







