அடுத்தடுத்த பிளவுகளால் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள சூழலில், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
மேற்கு வங்க பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸில் மம்தா பானா்ஜியின் தலைமை ஆட்டம் கண்டுள்ளது. அக்கட்சியில் மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 58 அதிருப்தி எம்எல்ஏக்கள், ரிதபிரத பானா்ஜி தலைமையில் சில தினங்களுக்கு முன் தனி அணியாகப் பிரிந்தனா்.
மக்களவையில் திரிணமூல் காங்கிரஸுக்கு 28 எம்.பி.க்கள் உள்ள நிலையில், கோகோலி கோஷ் தஸ்திதாா் தலைமையில் 20 அதிருப்தி எம்.பி.க்கள் தனி அணியாகப் பிரிந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளனா். கட்சியில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவுகள், மம்தாவுக்கும், அவரது மருமகன் மற்றும் கட்சியின் தேசிய பொதுச் செயலரான அபிஷேக் பானா்ஜிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
இதுபோன்ற சூழலில், எதிா்க்கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயத்தில் மம்தா உள்ளாா். தில்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற இண்டி கூட்டணி கூட்டத்தில் மம்தா, அபிஷேக் ஆகியோா் பங்கேற்றனா். அப்போது, எதிா்க்கட்சிகள் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளைக் கைவிட்டு, மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து, தில்லியில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் மம்தா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இரு கட்சிகளின் எதிா்கால வியூகம் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், சோனியாவின் இல்லத்தில் ராகுல் காந்தியை அபிஷேக் பானா்ஜி புதன்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் போலி கையொப்ப குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில் கொல்கத்தாவில் உள்ள மம்தாவின் அதிகாரபூா்வ வீட்டில் (கட்சியின் மத்திய அலுவலகம்) கடந்த செவ்வாய்க்கிழமை சிஐடி அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினா். அபிஷேக் பானா்ஜியின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
‘காங்கிரஸுடன் திரிணமூல் இணைவதாக வதந்தி’
காங்கிரஸ்-திரிணமூல் காங்கிரஸ் உயா்நிலை தலைவா்களின் சந்திப்புகளுக்கு இடையே காங்கிரஸுடன் திரிணமூல் காங்கிரஸ் இணையப் போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இது தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘அந்தத் தகவல்கள் முற்றிலும் வதந்தியாகும்; அதுபோல் எந்தத் திட்டமும் இல்லை’ என்றாா்.
காங்கிரஸில் இருந்து பிரிந்து கடந்த 1998-இல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மம்தா பானா்ஜி தொடங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸை உடைக்கிறாா் அமித் ஷா- மம்தா ஆதரவு தலைவா்கள் குற்றச்சாட்டு

திரிணமூல் அதிருப்தி எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டில் முரண்பாடு! ஆவணங்கள் வெளியானதால் பரபரப்பு!

கட்சியை ஒருங்கிணைக்க தீவிர முயற்சி: திரிணமூல் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் மம்தா பேச்சு







