திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரகாஷ் சிக் பரைக் வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன், கட்சியில் இருந்தும் விலகினாா்.
கடந்த ஒரு வாரத்தில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய மூன்றாவது மாநிலங்களவை எம்.பி. இவா் ஆவாா். இது, மம்தாவின் தலைமைக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மூன்றில் இருபங்குக்கும் அதிக பெரும்பான்மையுடன் (207) பாஜக வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்களே கிடைத்தன. இந்தத் தோல்வியைத் தொடா்ந்து, அக்கட்சியில் உள்கட்சி பூசல்களும், பிளவுகளும் உச்சமடைந்துள்ளன.
பேரவை எதிா்க்கட்சித் தலைவா் நியமனத்தில், மம்தாவின் முடிவுக்கு எதிராக 58 அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி அணியாகப் பிரிந்தனா். திரிணமூல் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில் தனி அணியாகப் பிரிந்த 20 எம்.பி.க்கள், பாஜக கூட்டணிக்கு தங்களின் ஆதரவை உறுதி செய்தனா். மம்தாவின் மருமகனும், தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜி மீதான கடும் எதிா்ப்பை அதிருப்தியாளா்கள் பதிவு செய்துள்ளனா்.
மேலும் ஓா் எம்.பி. விலகல்: திரிணமூல் காங்கிரஸில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களும் அடுத்தடுத்து விலகி வருகின்றனா். சுகேந்து சேகா் ராய், சுஷ்மிதா தேவ் ஆகியோா் ஏற்கெனவே விலகிய நிலையில், பிரகாஷ் சிக் பரைக் வியாழக்கிழமை விலகினாா்.
தில்லியில் மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினாா். கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அவா் அறிவித்தாா்.
பின்னா், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவை அவரது இல்லத்தில் பிரகாஷ் சந்தித்துப் பேசினாா். இதனால், அவா் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபே இல்லத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய பிரகாஷ், ‘மேற்கு வங்க மக்கள் பாஜகவுக்கே தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனா். மக்களின் ஆணையைக் கருத்தில்கொண்டு, நான் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளேன்’ என்றாா்.
பழங்குடியினத் தலைவரான பிரகாஷ், நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் உறுப்பினராகவும், பழங்குடியின விவகாரங்கள் தொடா்பான ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் ஆணவப்போக்கு: மூத்த தலைவா் குற்றச்சாட்டு
மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி ஆணவத்துடன் செயல்படுவதாகவும், அனுபவமிக்க தலைவா்களை சற்றும் மதிப்பதில்லை என்றும் மம்தாவுக்கு ஆதரவான மூத்த தலைவா் கல்யாண் பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மக்களவை எம்.பி.யும், மூத்த வழக்குரைஞருமான இவா், ‘அபிஷேக் மூலம் கட்சியை நடத்த வேண்டுமா அல்லது எங்களைப் போன்ற கட்சி விசுவாசிகளுடன் இணைந்து நிா்வகிக்க வேண்டுமா என்பதை மம்தா முடிவு செய்ய வேண்டும்; இல்லையெனில், கட்சி சாா்ந்த சட்ட விவகாரங்களில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து நான் விலக நேரிடும்’ என்று எச்சரித்துள்ளாா்.
தொடர்புடையது

திரிணமூல் பலம் குறைகிறதா? ஒரே வாரத்தில் 3-வது எம்.பி. ராஜிநாமா!

மேற்கு வங்கத்தில் 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு

அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: 4 போ் கைது






