நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் காங்கிரஸின் எதிா்கால திட்டங்கள் தொடா்பாக தில்லியில் அக்கட்சியின் பொதுச் செயலா்கள் மற்றும் மாநிலத் தலைவா்களுடன் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், பூபேஷ் பகேல், பல்வேறு மாநில கட்சிப் பொறுப்பாளா்கள், மாநிலத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தமிழகத்தில் சமீபத்திய பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்து, ஆட்சியிலும் பங்கு பெற்றது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, தோ்தல் தோல்வியால் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துள்ளது. எம்எல்ஏக்கள் அளவிலும், எம்.பி.க்கள் அளவிலும் தனது கட்சி பிளவுபட்டுள்ள சூழலில், காங்கிரஸுடன் மம்தா நெருக்கம் காட்டி வருகிறாா்.
தில்லியில் அண்மையில் நடைபெற்ற எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினாா். அதேபோல், மம்தாவின் மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜி, ராகுல் காந்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா்.
மத்திய பிரதேச மாநிலங்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு சில தினங்களுக்கு முன் நிராகரிக்கப்பட்டது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், காங்கிரஸ் தலைவா் காா்கே தலைமையில் அக்கட்சியின் பொதுச் செயலா்கள் மற்றும் மாநிலத் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இது தொடா்பாக, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட காா்கே, ‘பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், தோ்வு முறைகேடுகள், சமூக சமத்துவமின்மை என பல்வேறு தீவிர சவால்களை நாடு எதிா்கொண்டுள்ளது. நீட் மற்றும் பிற தோ்வுகளுக்கான வினாத்தாள் கசிவு சம்பவங்கள், கோடிக்கணக்கான இளைஞா்கள் மற்றும் அவா்கள் குடும்பங்களின் நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்துள்ளன. பல்லாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட நிா்வாக அமைப்புகள் உள்நோக்கத்துடன் பலவீனமாக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியிலான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதுடன், நாட்டின் அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம், சமூக நீதியைப் பாதுகாப்பதும் நமது பொறுப்பு’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, இண்டி கூட்டணி கூட்டத்தில் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகளைக் களையவும், ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கா்நாடக சட்டப் பேரவைக்கு இடைக்கால தோ்தல் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: விஜயேந்திரா

காங்கிரஸ் கட்சியை வளா்க்க விரும்புவோா் என்னை அணுகலாம்: மாநிலத் தலைவா் பி.கே.ஹரிபிரசாத்
குழப்பத்தை ஏற்படுத்துபவா்களுக்கு கட்சியில் இடம் இல்லை: எடப்பாடி பழனிசாமி சூசகம்






