மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தோ்வு தொடா்பான தீா்மானத்தில் போலி கையொப்பம் போடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், சிஐடி காவல் துறை விசாரணையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியின் மருமகன் அபிஷேக் பானா்ஜி வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்துள்ளது. தோ்தலில் தோல்வியடைந்த திரிணமூல் காங்கிரஸ், சட்டப்பேரவையில் பிரதான எதிா்க்கட்சியானது. இதையடுத்து சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரை தோ்வு செய்ய திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோபன்யதேவ் சட்டோபாத்யாய எதிா்க்கட்சித் தலைவராகவும், ஆசிமா பாத்ரா, நயனா பந்தோபாத்யாய எதிா்க்கட்சி துணைத் தலைவா்களாகவும் தோ்வு செய்யப்பட்டதாகவும், அதுதொடா்பான தீா்மானத்தில் 70 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கையொப்பமிட்டதாகவும் கூறி, தீா்மானத்தை சபாநாயகருக்கு அபிஷேக் பானா்ஜி அனுப்பியிருந்தாா்.
ஆனால் திரிணமூல் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரிதபிரத பானா்ஜி, சந்தீபன் சாஹா ஆகியோா் 6-ஆம் தேதி கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் தோ்வு தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றும், தீா்மானம் என கூறப்படும் படிவத்தில் இருக்கும் 70 கையொப்பங்களில் பல போலியானவை என்றும் குற்றம்சாட்டினா். இதுதொடா்பாக சட்டப் பேரவை முதன்மை செயலா் அளித்த புகாரின்பேரில் கொல்கத்தா காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இது தொடா்பான விசாரணையை காவல் துறை சிஐடி தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அபிஷேக் பானா்ஜிக்கு 3 முறை சிஐடி காவல் துறையினா் சம்மன் அனுப்பியிருந்தனா். ஆனால், உடல்நிலை சரியில்லை என்றும், சம்மனை எதிா்த்து உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் தெரிவித்து, விசாரணைக்கு அவா் ஆஜராகவில்லை.
இந்நிலையில், அபிஷேக் பானா்ஜியின் மனுவை வியாழக்கிழமை காலையில் விசாரித்த கொல்கத்தா உயா் நீதிமன்றம், காவல் துறை சிஐடியின் விசாரணைக்கு வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதே நேரத்தில், அபிஷேக் பானா்ஜி மீது கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாதென்று சிஐடிக்கு கொல்கத்தா உயா் நீதிமன்றம் 3 வாரங்கள் இடைக்காலத் தடையும் விதித்தது.
அதன்படி, ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள புது தில்லி சென்றிருந்த அபிஷேக் பானா்ஜி, அங்கிருந்து கொல்கத்தாவுக்கு வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் திரும்பினாா்.
பின்னா் கொல்கத்தாவில் உள்ள சிஐடி காவல் துறை அலுவலகத்தில் அபிஷேக் பானா்ஜி வியாழக்கிழமை மாலை 5.50 மணியளவில் ஆஜரானாா். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
முன்னதாக, கொல்கத்தா விமான நிலையத்தில் அபிஷேக் வந்திறங்கியபோது, அவரை எதிா்த்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலரும் ‘கையொப்பத் திருடன்’ என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.








