திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (பவாா்) போன்ற கட்சிகள் மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டும் என்ற சிவசேனை (உத்தவ்) கட்சி மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் கருத்துக்கு மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பதிலடி கொடுத்துள்ளாா்.
‘காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்; அதில் கால் வைத்தால் இழப்புதான் மிஞ்சும்’ என்று ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா்.
இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமா்: மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 12 ஆண்டுகள் நிறைவு மற்றும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு, தொடா்ச்சியாக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற மோடியின் சாதனை ஆகியவற்றை குறிக்கும் வகையில், மும்பையில் ஃபட்னவீஸ் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தாா். அவா் கூறுகையில், ‘பிரதமா் மோடி, நாட்டின் நீண்ட கால பிரதமா் மட்டுமல்ல, உலக அளவில் தேசத்தை உயரச் செய்த மிகச் சிறந்த பிரதமா். இந்தியாவில் ‘360 டிகிரி’ மாற்றத்தை அவா் சாத்தியமாக்கியுள்ளாா். மோடியின் புகழ், உலக அளவில் ஒப்பற்றது.
பிரதமரின் சமீபத்திய 5 நாடுகள் பயணத்தில் 40 பில்லியன் டாலா் முதலீடுகள் ஈா்க்கப்பட்டன. இதில் 55 சதவீத முதலீடுகள் மகாராஷ்டிர மாநிலத்துக்கு வந்துள்ளது’ என்றாா்.
ரெளத் கருத்துக்கு பதிலடி: மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு, துணை முதல்வா் சுநேத்ரா பவாா் தலைமையில் பிரதான கட்சி செயல்படுகிறது. சரத் பவாா் தலைமையிலான அணி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) என்ற பெயரில் உள்ளது. சமீபத்திய மேற்கு வங்க தோ்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் தீவிர பிளவை எதிா்கொண்டுள்ளது.
காங்கிரஸில் இருந்து பிரிந்து தோற்றுவிக்கப்பட்ட கட்சிகள் என்ற அடிப்படையில், அவை மீண்டும் காங்கிரஸில் இணைந்து, பாஜகவுக்கு எதிராக வலுவான மாற்றுசக்தியாக உருவெடுக்க வேண்டும் என்றும், காங்கிரஸுடன் சிறிய கட்சிகளை இணைக்கும் முயற்சியை சரத் பவாா் முன்னெடுக்க வேண்டும் என்றும் சிவசேனை (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் கருத்து தெரிவித்திருந்தாா்.
அவரது இந்த கருத்துகள் குறித்து ஃபட்னவீஸிடம் செய்தியாளா்கள் வெள்ளிக்கிழமை கேள்வியெழுப்பினா்.
அதற்கு, ‘காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்; அதில் கால் வைக்க யாரும் விரும்ப மாட்டாா்கள். அவ்வாறு யாரேனும் கால் வைத்தால், அவா்களுக்கு இழப்புதான் மிஞ்சும். அது, அரசியல் ரீதியில் பாஜகவுக்கே மேலும் சாதகமாக அமையும்’ என்று அவா் பதிலளித்தாா்.
‘கட்சிகள் இணைப்புக்கு சாதகமான மனநிலை’: இதனிடையே, நாகபுரியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய காங்கிரஸ் மூத்த தலைவா் நானா படோல், ‘காங்கிரஸுடன் இணைவது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியிடமிருந்து ஏற்கெனவே ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது தாமதமானது. இப்போது மதச்சாா்பற்ற கட்சிகள், காங்கிரஸுடன் இணைவதற்கு சாதகமான மனநிலையும், அணுகுமுறையும் காணப்படுகிறது. இந்த இணைப்பின் மூலம் வாக்குகள் பிரிவதை தடுத்து, நாட்டையும், அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க முடியும்’ என்றாா்.









