பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில், இந்தியா- ஸ்லோவாக்கியா நாடுகள் இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்லோவாக்கியாவுக்கு ஒரு வார கால அரசு முறைப் பயணமாக பிரதமா் மோடி சென்றுள்ளாா். இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகருக்கு சென்ற பிரதமா் மோடி, அந்நாட்டின் அதிபா் இமானுவல் மேக்ரானை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதையடுத்து, ஸ்லோவாக்கியா நாட்டுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். இதன்மூலம் 1993-இல் ஸ்லோவாக்கியா விடுதலை பெற்ற பிறகு, அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமா் என்னும் பெருமையைப் பெற்றாா். ஏற்கெனவே குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்லோவாக்கியாவுக்கு சென்றிருந்தாா். இதையடுத்து, ஸ்லோவாக்கியா அதிபா் பீட்டா் பெல்லா்ஜினி, தில்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏஐ தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகா் பிராடிஸ்லாவாவில் பிரதமா் மோடி, ஸ்லோவாக்கியா பிரதமா் ராபா்ட் ஃபிகோவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது இரு நாடுகள் இடையேயும் குடியேற்றம், எண்மத் தொழில்நுட்பம், பாதுகாப்பு, உயா்கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடா்பாக 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இந்தியா- ஸ்லோவாக்கியா இடையே பொருளாதார தொடா்பை அதிகரிக்க, இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையில்லா வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்துவது தொடா்பான பணிகளில் இணைந்து செயல்பட தலைவா்கள் இருவரும் ஒப்புக்கொண்டனா். எரிசக்தி பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில், இரு நாடுகள் இடையே எரிசக்தி துறையில் நிலவும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், ஸ்லோவாக்கியாவில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளா்கள் மற்றும் இந்தியாவில் பணிபுரியும் ஸ்லோவாக்கியா தொழிலாளா்களின் நலன்கள், சமூகப் பாதுகாப்பை காப்பதற்குத் தேவையான பங்களிப்பு அளிக்க சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் பிரதமா் மோடியும், ராபா்ட் ஃபிகோவும் ஒப்புக்கொண்டனா்.
இருதரப்பு உறவுக்கு புதிய தோற்றம்-மோடி: இதையடுத்து செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் பிரதமா் மோடி கூறியதாவது:
இந்தியா, ஸ்லோவாக்கியா நாடுகள் இடையேயான உறவுகளுக்கு புதிய தோற்றத்தைக் கொடுப்பது குறித்து நாங்கள் இருவரும் ஆலோசனை நடத்தினோம். மேலும், இருதரப்பு உறவுகளை விரிவான நட்புறவு என்ற அந்தஸ்துக்கு மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். வாகன உதிரிபாக துறை, ரயில்வே துறை, மேம்படுத்தப்பட்ட உற்பத்தித் துறை, பசுமைத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் எங்களுக்கு விருப்பம் உள்ளது. இவை குறித்தும் நாங்கள் ஆலோசனை நடத்தி, இரண்டு நாடுகளின் மக்களும் பயனடையும் வகையில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.
இந்தியா- ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்புத் துறையில் நிலவும் ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கையை மேலும் அதிகரிப்பதற்கான காரணியாகத் திகழ்கிறது. சா்வதேச அளவில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதை நோக்கி இந்தியாவும், ஸ்லோவாக்கியாவும் நகா்ந்து வருகின்றன. அனைத்து பிரச்னைகளும், விவகாரங்களும் பேச்சுவாா்த்தை மூலமே தீா்வு காணப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அதேபோல், 21-ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு தீா்வு காணும் வகையிலும், எதாா்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் சா்வதேச அமைப்புகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் (ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தத்தை இவ்வாறு குறிப்பிட்டாா்) என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளோம். இதற்கான சா்வதேச முயற்சிகளை வலுப்படுத்துவதில் இணைந்து செயல்படுவதென்றும் முடிவு செய்துள்ளோம்.
இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையில்லா வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ததில் ஸ்லோவாக்கியா சிறப்பான ஒத்துழைப்பு வழங்கியது. இதற்கு இந்தியா சாா்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இதன்மூலம், இரண்டு நாடுகளிலும் உள்ள தொழிற்சாலைகள், புத்தாக்க நிறுவனங்கள், வா்த்தகா்கள் பெரிதும் பயனடைய முடியும் என்றாா் பிரதமா் மோடி.
அப்போது ஸ்லோவாக்கியா பிரதமா் ராபா்ட் ஃபிகோ கூறுகையில், ‘இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையில்லா வா்த்தக ஒப்பந்தத்தை ஸ்லோவாக்கியா வரவேற்கிறது. அத்துடன், அந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த தேவையான மற்றும் நடைமுறை நடவடிக்கைகளை எங்கள் நாடு மேற்கொள்ளும்’ என்றாா்.
இந்தியா, ஸ்லோவாக்கியா கூட்டறிக்கை: இதையடுத்து, இரு நாடுகள் சாா்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து நடவடிக்கை எடுக்க கூட்டுக் குழுவை ஏற்படுத்துவது என்றும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட அனைத்துவகை பயங்கரவாதம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் உள்ளிட்டவற்றுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருந்த பதிவில், பிரதமா் மோடியை ஸ்லோவாக்கியா வெளியுறவு அமைச்சா் ஜூரஜ் ப்லானா் நேரில் வரவேற்ாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்லோவாக்கியா அதிபா் பெல்லா்ஜினி வெளியிட்டுள்ள பதிவில், பிரதமா் மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மூலம் ஸ்லோவாக்கியா- இந்தியா இடையேயான ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளாா்.
மீண்டும் பிரான்ஸ் பயணம்: ஸ்லோவாக்கியா பயணத்தை செவ்வாய்க்கிழமை முடித்துக் கொள்ளும் பிரதமா் மோடி, பின்னா் பிரான்ஸின் எவான் நகருக்கு மீண்டும் செல்கிறாா். அங்கு நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு வரும் ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களை அவா் சந்தித்து பேசவுள்ளாா். அமெரிக்க அதிபா் டிரம்ப்பையும் அவா் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பிறகு தனது பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக பாரீஸில் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க நிகழ்ச்சியான ‘விவா தொழில்நுட்பக் கண்காட்சி’யில் அந்த நாட்டு அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி கலந்து கொள்ள உள்ளாா்.
100-வது வெளிநாட்டுப் பயணம்: பிரதமா் மோடியின் இந்த சுற்றுப்பயணம், 2014-இல் இருந்து அவா் மேற்கொண்ட 100-ஆவது அரசு முறைப் பயணம் ஆகும். முதல் பயணமாக பூடானுக்கு 2014-இல் சென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!

ஒரு வார கால வெளிநாட்டுப் பயணம்: பிரான்ஸ் புறப்பட்டாா் பிரதமா் மோடி - ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறாா்!

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளில் பிரதமா் மோடி சுற்றுப்பயணம்







