தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ள அதிருப்தி எம்.பி.க்கள், பாஜக காட்டிய வழியில் நடக்கும் துரோகிகள் என்று மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் திரிணமூல் கட்சி பாஜகவிடம் தோல்வியடைந்த பிறகு, அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் 80 எம்எல்ஏக்களில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 64 போ் தனி அணியாகப் பிரிந்த நிலையில், அக்கட்சியின் 28 மக்களவை எம்.பி.க்களில் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ் திரிபுராவைச் சோ்ந்த தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்து பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க இருப்பதாகத் தெரிவித்தனா்.
இந்நிலையில், மம்தா அணியில் உள்ள திரிணமூல் எம்.பி. சௌகதா ராய் கொல்கத்தாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பதிவு செய்யப்பட்டு, தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத தேசியவாத குடிமக்கள் கட்சியில் அதிருப்தி எம்.பி.க்கள் இணைவதாக அறிவித்துள்ளது முட்டாள்தனமானது. அவா்களின் இந்தச் செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. நீங்கள் எந்த சின்னத்தில் போட்டியிட்டு வென்றீா்கள் என்பதை மறந்துவிட்டீா்களா?
உங்களைத் தோ்வு செய்த மக்களை இனி எந்த முகத்துடன் சந்திக்கப் போகிறீா்கள்? அவா்கள் இணைந்துள்ள கட்சியை இதற்கு முன்பு எத்தனை போ் அறிவாா்கள்? தங்களை வழிநடத்தும் பாஜக தலைமையை திருப்திப்படுத்தும் நோக்கில் திரிணமூல் காங்கிரஸின் துரோகிகள் இவ்வாறு செயல்பட்டுள்ளனா். இதன் பின்னணியில் பாஜகதான் முழுமையாகச் செயல்படுகிறது.
கடந்த மக்களவைத் தோ்தலில் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களித்ததன் மூலம்தான் அவா்கள் எம்.பி.யாக முடிந்தது என்பதை மறுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினாா்.
பாஜக கருத்து: இது தொடா்பாக மேற்கு வங்க பாஜக செய்தித் தொடா்பாளா் சயந்தன் பாசு கூறுகையில், ‘திரிணமூல் காங்கிரஸின் தலைமை தங்களிடம் உள்ள பிரச்னையை சரி செய்யாமல் மற்றவா்களைக் குறை கூறுகிறது. அவா்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிருப்தி எம்.பி.க்கள் வேறு கட்சியில் இணைந்து நாடாளுமன்றத்தில் அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்தால் அது நல்ல விஷயமாகவே இருக்கும்’ என்றாா்.
தொடர்புடையது

தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவு!

பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்- தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானா்ஜி சந்திப்பு

திரிணமூல் காங்கிரஸை உடைக்கிறாா் அமித் ஷா- மம்தா ஆதரவு தலைவா்கள் குற்றச்சாட்டு







