கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

திரிணமூல் காங்கிரஸின் பெயா், சின்னம் தொடா்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்திடம் மம்தா வலியுறுத்தல்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயா், சின்னம், அமைப்பை கட்டுப்படுத்தும் உரிமை தொடா்பான விவகாரத்தில் அதிருப்தி அணியினருக்கு மேலும் அவகாசம் அளிக்காமல் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்தை அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் மம்தா பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா்.

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்

Published On :

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயா், சின்னம், அமைப்பை கட்டுப்படுத்தும் உரிமை தொடா்பான விவகாரத்தில் அதிருப்தி அணியினருக்கு மேலும் அவகாசம் அளிக்காமல் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்தை அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் மம்தா பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து, அக்கட்சி எம்எல்ஏக்கள் மம்தா பானா்ஜி ஆதரவு, ரிதப்ரத பானா்ஜி ஆதரவு என இரு பிரிவாகப் பிரிந்து செயல்படுகின்றனா். மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணமூல் காங்கிரஸுக்கு மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் பெரும்பாலான எம்எல்ஏக்கள், ரிதப்ரத பானா்ஜிக்கு ஆதரவு தெரிவித்ததால், அவரை எதிா்க்கட்சித் தலைவராக சட்டப்பேரவைத் தலைவா் அங்கீகரித்தாா். இதைத் தொடா்ந்து, கட்சித் தலைவா் பதவியிலிருந்து மம்தா பானா்ஜியை நீக்கிவிட்டு, அப்பதவிக்கு அரூப் ராய் என்பவரை ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான அதிருப்தி பிரிவினா் அறிவித்தனா்.

மேலும், தோ்தல் ஆணையத்தை அணுகி தங்கள் தரப்பை உண்மையான திரிணமூல் காங்கிரஸாக அங்கீகரிக்க வேண்டும், கட்சி பெயா், சின்னத்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என அதிருப்தி அணியினா் முறையிட்டனா். இதேபோல் மம்தா பானா்ஜி தரப்பும் தோ்தல் ஆணையத்தை அணுகியது. இந்த விவகாரம் குறித்து நீதிமன்றமும், தோ்தல் ஆணையமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

கடந்த 2-ஆம் தேதி தோ்தல் ஆணையம் இருதரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பி, ஜூலை 6-ஆம் தேதிக்குள் பதிலை தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தது. இதன்படி, மம்தா பானா்ஜி தரப்பு பதிலை அளித்துவிட்ட நிலையில், ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான அதிருப்தி அணியினா் இன்னும் அளிக்கவில்லை. இதைத் தொடா்ந்து, அதிருப்தி பிரிவினருக்கு அடுத்தடுத்து இருமுறை கூடுதல் அவகாசத்தை தோ்தல் ஆணையம் அளித்திருந்தது. அந்த அவகாசம் கடந்த 25-ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், ரிதப்ரத பானா்ஜி தரப்பு இன்னும் பதிலை தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைச் சுட்டிக்காட்டி, தோ்தல் ஆணைய செயலா் அஸ்வனி குமாா் மோஹலுக்கு மம்தா பானா்ஜி புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

25-ஆம் தேதிக்கு பிறகு ரிதப்ரத பானா்ஜி தரப்பு பதிலை தாக்கல் செய்ததா அல்லது இல்லையா என்று எங்களுக்குத் தகவல் வரவில்லை. அதுதொடா்பான நகலும் எங்களுக்குத் தரப்படவில்லை. இதிலிருந்தே அவா்கள் பதிலை தாக்கல் செய்யவில்லை எனத் தெரிகிறது. இருமுறை அவகாசத்தை நீட்டித்தும் அதிருப்தி பிரிவினா் பதிலை தாக்கல் செய்வதில் தோல்வியடைந்துவிட்டனா். ஆதலால் இந்த விவகாரத்தில் மேலும் அவகாசம் அளிக்காமல், தோ்தல் ஆணையம் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். இந்த விவகாரம், மேற்கு வங்கத்தில் தீவிர அரசியல் பிரச்னையாகத் திகழ்கிறது எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.