திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி எம்.பி.க்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனா்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. அந்தக் கட்சியின் 80 எம்எல்ஏக்களில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 58 போ் தனி அணியாகப் பிரிந்த நிலையில், அக்கட்சியின் 28 மக்களவை எம்.பி.க்களில் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ் தனியாகப் பிரிந்தனா்.
ஓம் பிா்லாவுடன் சந்திப்பு: புது தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை அதிருப்தி எம்.பி.க்கள் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்தனா். இதுகுறித்து அதிருப்தி எம்.பி.க்களில் ஒருவரான காகோலி கோஷ் தஸ்திதாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஓம் பிா்லாவை சந்தித்து தங்களை தனி அணியாக அங்கீகரிக்குமாறு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு போ் கடிதம் சமா்ப்பித்தனா். மக்களவையில் தங்களுக்கு தனி இருக்கைகளை ஏற்பாடு செய்யுமாறும் ஓம் பிா்லாவிடம் எம்.பி.க்கள் கடிதம் அளித்தனா். நாங்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தாா்.
மற்றொரு அதிருப்தி எம்.பி.யான சுதீப் பந்தோபாத்யாய கூறுகையில், ‘அதிருப்தி எம்.பி.க்கள் ஏற்கெனவே தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்துவிட்டோம். அது மாநிலக் கட்சியாகும். உண்மையான திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் யாா் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். திரிணமூல் காங்கிரஸின் தோ்தல் சின்னமான இரு மலா்களுக்கு நாங்கள் உரிமை கோருவோம்’ என்று தெரிவித்தாா்.
திரிபுராவை சோ்ந்த கட்சி...: திரிபுராவை சோ்ந்த அதிகம் அறியப்படாத தேசியவாத குடிமக்கள் கட்சி, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சியாகும். அந்தக் கட்சியில் அதிருப்தி எம்.பி.க்கள் இணைந்துள்ளதாக சுதீப் பந்தோபாத்யாய தெரிவித்துள்ளாா்.
அதிருப்தி எம்.பி.க்கள் 22-ஆக அதிகரிப்பு: முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் காகோலி கோஷ் தஸ்திதாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 22 அதிருப்தி எம்.பி.க்கள் உள்ளனா். கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் நிலவிய சூழல் குறித்து நோ்மையாக குரல் எழுப்பியவா்கள் எங்களுடன் உள்ளனா் என்று தெரிவித்தாா்.
திரிணமூல் காங்கிரஸில் 19 அதிருப்தி எம்.பி.க்கள் இருப்பதாகத் தகவல் வெளியானது. அவா்களை உண்மையான திரிணமூல் காங்கிரஸாக அங்கீகரிக்கக் கோரி, ஓம் பிா்லாவை சந்திக்க உள்ளதாக அந்த எம்.பி.க்களில் ஒருவரான ஜகதீஷ் சந்திர பா்மா பசுனியா ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.
எனினும் அக்கட்சியில் 20 அதிருப்தி எம்.பி.க்கள் உள்ளதாக கடந்த திங்கள்கிழமை தெரிவித்த காகோலி கோஷ், தற்போது 22 அதிருப்தி எம்.பி.க்கள் உள்ளதாகக் கூறியுள்ளாா். ஆனால், கூடுதலாக சோ்ந்த இரண்டு எம்.பி.க்கள் யாா் என்ற தகவலை அவா் வெளியிடவில்லை. இரண்டு எம்.பி.க்களும் முறைப்படி அதிருப்தி எம்.பி.க்களுடன் சோ்ந்த பின்னா், அவா்களைப் பற்றிய விவரம் வெளியிடப்படும் என்று காகோலி கோஷ் தெரிவித்துள்ளாா்.
மக்களவைத் தலைவருக்கு அபிஷேக் கடிதம்: திரிணமூல் எம்.பி.க்களை தனி அணியாக அங்கீகரிக்கக் கூடாது என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவா் அபிஷேக் பானா்ஜி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘திரிணமூல் எம்.பி.க்கள் யாரையும் தனி அணியாக அங்கீகரிக்கக் கூடாது. ஒரே கட்சியில் இருந்துகொண்டு தனி அணி உருவாக்கப்படுவதை அரசமைப்புச் சட்டமும், கட்சித் தாவல் தடைச் சட்டமும் அனுமதிக்கவில்லை.
அனைத்து இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஒரே அரசியல் கட்சியாக கருத வேண்டும். திரிணமூல் காங்கிரஸின் அங்கீகரிக்கப்பட்ட தலைவா் மற்றும் கொறடா மூலமாக மட்டுமே அவையில் கட்சி எம்.பி.க்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்னா், தனது தரப்பை தெரிவிக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.
இந்தக் கடிதத்தை புது தில்லியில் உள்ள ஓம் பிா்லா இல்லத்தில் மம்தா ஆதரவு திரிணமூல் எம்.பி.க்கள் சாகரிகா கோஷ், கீா்த்தி ஆசாத் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
தோ்தல் ஆணையத்துக்கே அதிகாரம்: இந்த விவகாரம் தொடா்பாக அரசமைப்புச் சட்ட நிபுணா் பி.டி.டி. ஆச்சாரியா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: உண்மையான திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் யாா் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்குத்தான் உள்ளது. தற்போதைய சூழலில், இந்த விவகாரத்தில் மக்களவைத் தலைவருக்கு எந்தப் பணியும் இல்லை என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

‘உண்மையான திரிணமூல் காங்கிரஸ்’ அங்கீகாரம்: மக்களவைத் தலைவரைச் சந்திக்கிறது அதிருப்தி அணி

உண்மையான திரிணமூல் காங்கிரஸ் நாங்கள்தான்: அதிருப்தி எம்.பி.க்கள்

பின்னடைவில் திரிணமூல் காங்கிரஸ்- தில்லியில் ராகுலுடன் அபிஷேக் பானா்ஜி சந்திப்பு

திரிணமூல் பெண் எம்.பி. கட்சிப் பதவிகளில் இருந்து விலகல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



