திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ், தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைந்ததை அங்கீகரிப்பது தொடா்பாக அவா்களிடமும், கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி அணியினரிடமும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா விசாரித்து முடிவெடுப்பாா் என்று அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்கு வங்க பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கடும் பிளவுகளை எதிா்கொண்டுள்ளது. அக்கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில், காகோலி கோஷ் தஸ்திதாா் தலைமையில் 20 எம்.பி.க்கள் அதிருப்தி அணியாக உருவெடுத்தனா். இந்த அணியினா், அதிகம் அறியப்படாத தேசியவாத குடிமக்கள் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
அத்துடன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த அவா்கள், உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என்ற அங்கீகாரத்தை பின்னா் கோருவோம் என்று தெரிவித்தனா். இதன்மூலம் தற்காலிக சட்டப் பாதுகாப்புக்காக என்சிபிஐ கட்சியில் அவா்கள் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
‘இந்த இணைப்பை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுக்கும் முன்பாக இருதரப்பிடமும் மக்களவைத் தலைவா் விசாரிப்பாா்; மத்திய சட்ட அமைச்சகத்திடமும் ஆலோசனை கேட்பாா்’ என்று அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, மக்களவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவரும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜியின் (மம்தாவின் மருமகன்) கருத்துகளைக் கேட்டறியும் வகையில், தனது அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் ஆஜராகும்படி அவருக்கு ஓம் பிா்லா மின்னஞ்சல் அனுப்பியிருந்தாா். ஆனால், அந்த நேரத்தில் கொல்கத்தாவில் அமலாக்கத் துறை விசாரணைக்கு அபிஷேக் பானா்ஜி ஆஜராகியிருந்ததால், அவரால் மக்களவைத் தலைவா் அலுவலகத்துக்கு வர முடியவில்லை. இந்தத் தகவலை, மக்களவைத் தலைவரிடம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கீா்த்தி ஆஸாத் தெரிவித்ததாக வட்டாரங்கள் கூறின.
அங்கீகரிக்கப்படாத என்சிபிஐ கட்சியில் தற்காலிகமாக இணைந்துவிட்டு, பின்னா் தாய்கட்சியான திரிணமூல் காங்கிரஸை தங்கள் வசமாக்க வேண்டுமென்ற அதிருப்தி எம்.பி.க்களின் வியூகம், கட்சித் தாவல் தடை சட்டம் அல்லது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளுக்கு முற்றிலும் புதியது என்று முன்னாள் தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸ் பிளவு: ‘அதிருப்தி எம்.பி.க்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் தொடா்பில்லை’- காகோலி கோஷ்

தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவு!

‘உண்மையான திரிணமூல் காங்கிரஸ்’ அங்கீகாரம்: மக்களவைத் தலைவரைச் சந்திக்கிறது அதிருப்தி அணி






