திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ், தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைந்த விவகாரம் தொடா்பாக ஆலோசிப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலரும், கட்சித் தலைவா் மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானா்ஜிக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அழைப்பு விடுத்துள்ளாா்.
முன்னதாக, அதிருப்தி எம்.பி.க்கள் மாற்றுக் கட்சியில் இணைந்ததை அங்கீகரிப்பது தொடா்பாக அவா்களிடமும், திரிணமூல் தலைவா் மம்தா பானா்ஜி அணியினரிடமும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா விசாரித்து முடிவெடுப்பாா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தங்கள் கட்சியில் இருந்து பிரிந்தவா்களை தனி அணியாக அங்கீகரிக்க எதிா்ப்புத் தெரிவித்து ஓம் பிா்லாவுக்கு அபிஷேக் பானா்ஜி கடிதம் எழுதியிருந்தாா். இந்தக் கடிதத்தை மம்தா ஆதரவு எம்.பி.க்கள் இருவா் ஓம் பிா்லாவிடம் நேரில் அளித்தனா்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக விவாதிப்பதற்கான கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெறுவதாகவும், அதில் பங்கேற்குமாறும் அபிஷேக் பானா்ஜிக்கு ஓம் பிா்லா அழைப்பு விடுத்துள்ளாா். இத்தகவலை நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில் புதன்கிழமை பிற்பகல் வரை மக்களவைத் தலைவரிடம் இருந்து தங்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ் என்சிபிஐ கட்சியில் இணைந்துவிட்டதால், மக்களவைத் தலைவா் அதை அங்கீகரிக்கவே வாய்ப்புள்ளது. ஏனெனில் 29 பேரில் 20 போ் (மூன்றில் இரு பங்கு) வெளியேறிவிட்டதால், அவா்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. இது மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
தொடர்புடையது
திரிணமூல் எம்.பி.க்கள் விவகாரம்- ‘இருதரப்பிடமும் விசாரித்த பிறகு மக்களவைத் தலைவா் முடிவெடுப்பாா்’

தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவு!

‘உண்மையான திரிணமூல் காங்கிரஸ்’ அங்கீகாரம்: மக்களவைத் தலைவரைச் சந்திக்கிறது அதிருப்தி அணி






