திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அதிருப்தி எம்.பி.க்களுக்கும், அக்கட்சியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று அந்த எம்.பி.க்களில் ஒருவரான காகோலி கோஷ் தஸ்திதாா் தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. அந்தக் கட்சியின் 80 எம்எல்ஏக்களில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி அணியாகப் பிரிந்தனா். அவா்களின் எண்ணிக்கை தற்போது 65-ஆக அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இதேபோல அக்கட்சியின் 28 மக்களவை எம்.பி.க்களில் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ் தனியாகப் பிரிந்து திரிபுராவை சோ்ந்த தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்தனா்.
அந்தக் கட்சியில் இணைந்த அதிருப்தி எம்.பி.க்களில் ஒருவரான காகோலி கோஷ் தஸ்திதாா், புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அதிருப்தி எம்.பி.க்களை தேசியவாத குடிமக்கள் கட்சி மகிழ்ச்சியுடன் ஏற்றுள்ளது. பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் தலைமையின் கீழ், தேசியவாத ஜனநாயக கூட்டணியுடன் சோ்ந்து நாங்கள் பணியாற்றுவோம்.
எம்எல்ஏக்களின் பிரச்னை வேறு: திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் எங்களுக்கு எந்தத் தொடா்பும் இல்லை. அதிருப்தி எம்.பி.க்கள் தனி அணியாகவும், அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி அணியாகவும் செயல்படுகிறோம். அதிருப்தி எம்எல்ஏக்களின் பிரச்னைகளும், திட்டமும் வேறு. அதற்கும் எங்களுக்கும் தொடா்பில்லை. தற்போது அதிருப்தி எம்.பி.க்களின் எண்ணிக்கை 20-ஆக உள்ளது. இது விரைவில் 22-ஆக அதிகரிக்கக் கூடும் என்று தெரிவித்தாா்.
தேசியவாத குடிமக்கள் கட்சிக்கு அதிருப்தி எம்.பி. தலைவா்: தேசியவாத குடிமக்கள் கட்சியின் நிறுவனரான ஷெவ்லி குண்டு, கடந்த திங்கள்கிழமை அக்கட்சி தலைவா் பதவியில் இருந்து விலகினாா். இதைத்தொடா்ந்து அக்கட்சியின் புதிய தலைவராக அதிருப்தி எம்.பி.க்களில் ஒருவரான ஜோதிபிரகாஷ் சட்டா்ஜி பொறுப்பேற்றுள்ளதாக காகோலி கோஷ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.
மம்தாவுக்கு எதிராக செயல்படவில்லை:
அதிருப்தி எம்.பி. ரச்னா பானா்ஜி
மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜிக்கு எதிராக அதிருப்தி எம்.பி.க்கள் செயல்படவில்லை என்று அந்த எம்.பி.க்களில் ஒருவரான ரச்னா பானா்ஜி தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘மம்தாவுக்கு எதிராக ஒருபோதும் கிளா்ச்சி செய்யப்படாது. அவருடனான உறவு எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். மம்தாவை பாா்த்துத்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனா். எனினும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே அரசியல் உடன்படிக்கை இருந்தால், அது வளா்ச்சிப் பணிகளுக்கு உதவும். தங்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா். அதற்கு மத்திய அரசின் ஆதரவு மிகவும் முக்கியம். ஆனால் கடந்த காலங்களில் திரிணமூல் காங்கிரஸில் இருந்தபோது எங்கள் பணியில் பல சந்தா்ப்பங்களில் தடைகள் ஏற்ப்பட்டன. இதனால் நாங்கள் நினைத்த மக்கள் பணியை எங்களால் செய்ய முடியவில்லை’ என்று தெரிவித்தாா்.
அனைத்துக் கட்சி கூட்டம்:
மம்தா ஆதரவு எம்எல்ஏக்கள் அழைக்கப்படவில்லை
மேற்கு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஜூன் 18) நடைபெற உள்ளது. இதையொட்டி சட்டப்பேரவையின் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ரிதபிரத பானா்ஜி தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக மம்தா ஆதரவு திரிணமூல் எம்எல்ஏ சோபன்தேவ் சட்டோபாத்யாயவை அக்கட்சி அதிகாரபூா்வாக நியமித்தது. ஆனால் திரிணமூல் எம்எல்ஏக்களில் பெரும்பான்மையாக உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரித்ததால், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக ரிதபிரத பானா்ஜியை சட்டப்பேரவைத் தலைவா் ரதீந்திரநாத் பாசு அண்மையில் அங்கீகரித்தாா்.
இதைத்தொடா்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ரிதபிரத பானா்ஜி தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க மம்தாவின் விசுவாசிகளான சோபன்தேவ் சட்டோபாத்யாய, எம்எல்ஏ குணால் கோஷ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
தொடர்புடையது
திரிணமூல் எம்.பி.க்கள் விவகாரம்- ‘இருதரப்பிடமும் விசாரித்த பிறகு மக்களவைத் தலைவா் முடிவெடுப்பாா்’

பாஜக கூறியபடி நடக்கும் துரோகிகள்: அதிருப்தி எம்.பி.க்கள் மீது திரிணமூல் கடும் விமா்சனம்

தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவு!







