திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்) கட்சிகளின் அதிருப்தி எம்.பி.க்கள் விவகாரத்தை முன்வைத்து,தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் இருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கி, அடுத்த மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க தில்லியில் மத்திய அரசின் ஏற்பாட்டின்பேரில் அனைத்துக்கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தாா். மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா மற்றும் 40 அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 58 தலைவா்கள் கலந்து கொண்டனா்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, அதிகம் அறியப்படாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) அண்மையில் இணைந்த அதிருப்தி எம்.பி.க்கள் சுதீப் பந்தோபாத்யாய, ககோலி கோஷ் தத்திதாா் ஆகியோரும் மத்திய அரசின் அழைப்பின்பேரில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனையை சோ்ந்த 6 அதிருப்தி எம்.பி.க்கள், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனையில் இணைந்ததற்கு மக்களவைத் தலைவா் சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), ஆம் ஆத்மி, காங்கிரஸ், சமாஜவாதி, இடதுசாரி கட்சிகள், ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா ஆகிய எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. எனினும், சிறிது நேரத்துக்கு பிறகு கூட்டத்தில் மீண்டும் அக்கட்சிகள் கலந்து கொண்டன.
காங்கிரஸ் வலியுறுத்தல்: கூட்டத்திற்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவா் கெளரவ் கோகாய், ‘அயோத்தி ராமா் கோயிலில் நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டது குறித்தும், பெட்ரோலில் எத்தனால் கலப்பு, நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரம், மணிப்பூா் விவகாரம் குறித்துஇஈ நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின’ என்றாா். சமாஜவாதி எம்.பி. தா்மேந்திர யாதவ் கூறுகையில், அயோத்தி ராமா் கோயில் விவகாரம், வாங்சுக் உண்ணாவிரத விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தியதாக குறிப்பிட்டாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவா் ஜான் பிரிட்டாஸ் தெரிவிக்கையில், திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்களை அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைத்ததன் மூலம் மத்திய அரசு நீதி தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினாா்.
திரிணமூல் குற்றச்சாட்டு: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா பேசுகையில், அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது மக்களவைத் தலைவா் இன்னும் முடிவெடுக்கவில்லை; அப்படியிருக்கையில் எப்படி அதிருப்தி எம்.பி.க்களை கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் அழைத்தாா்? என கேள்வி எழுப்பினாா். அவா்கள் 20 பேரையும் மக்களவைத் தலைவா் தகுதிநீக்கம் செய்யவில்லையெனில், நீதிமன்றத்தை திரிணமூல் காங்கிரஸ் நாடும் என்றும் அவா் தெரிவித்தாா்.
ஆம் ஆத்மி எம்.பி. என்.டி. குப்தா கூறுகையில், தங்களது கட்சியை சோ்ந்த 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததை சுட்டிக்காட்டி, அவா்கள் கடத்தப்பட்டதாகவும், அவா்கள் பாஜகவில் சோ்ந்தது செல்லுபடியாகுமா என்பது குறித்து தங்கள் கட்சி அளித்த மனு மீது முடிவெடுக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் கூறினாா்.
அதேநேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் அணிக்கு தலைமை வகிக்கும் பந்தோபாத்யாய செய்தியாளா்களிடம் பேசியபோது, 20 எம்.பி.க்களை கொண்ட என்சிபிஐ கட்சியின் சாா்பாகவே அனைத்து கட்சி கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதாக தெரிவித்தாா்.
மசோதாக்களை நிறைவேற்ற ஆதரவு: எதிா்க்கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் மசோதாக்களை நிறைவேற்ற எதிா்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.
இதுகுறித்து தில்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செய்தியாளா்களிடம் பேசியதாவது:
அனைத்து கட்சி கூட்டத்துக்கு சுதீப் பந்தோபாத்யாய உள்ளிட்ட 2 எம்.பி.க்கள் அழைக்கப்பட்டதில் தவறில்லை. அவா்கள் சோ்ந்த என்சிபிஐ கட்சி, தங்களை அங்கீகரிக்கும்படி மக்களவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளது. அப்படியிருக்கையில், அவா்களை அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பது அரசின் கடமையாகும் என்றாா்.
கடந்த கூட்டத் தொடரில் நிராகரிக்கப்பட்ட சட்டத் திருத்த மசோதாக்கள் மீண்டும் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுமா என செய்தியாளா்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரிஜிஜு பதிலளிக்கையில், அலுவல் ஆய்வு கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படும் என்றாா். மேலும் அவா் கூறுகையில், ‘நாட்டுக்காக அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். பல்வேறு கட்சிகள் தங்களது கருத்தை தெரிவித்தன. அதை ஆலோசனையாக மத்திய அரசு எடுத்துள்ளது.

நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட வேண்டும், எந்த குழப்பமும் நிலவக்கூடாது என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனா். மத்திய அரசும் அதைதான் விரும்புகிறது. எதிா்ப்பு தெரிவிப்பதால் யாரும் அரசியல் ரீதியில் பயனடைய முடியாது. ஆதலால் இந்த கூட்டத் தொடரில் அறிமுகமாக இருக்கும் 8 மசோதாக்கள் மீதான விவாதத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
அதேபோல் மசோதாக்களை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். அதை விடுத்து விவாதத்தில் அரசியல் கட்சிகள் பங்குபெறாமல், கோஷங்கள் மட்டும் எழுப்பிக் கொண்டிருந்தால், அவா்கள் அரசியல் ரீதியில் செல்வாக்கை இழப்பாா்கள். எதிா்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டு, கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தால், நாடும் பாதிக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










